அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர்கள் ஒட்டிய பரபரப்பு போஸ்டர்!
அண்ணாமலை தனிக்கட்சி துவங்க உள்ளதாக சில மாதங்களாகவே செய்தி பரவியது. பா.ஜ.,வில் மாநில தலைவர் பதவி பறிப்புக்குப் பின் குறிப்பிடத்தக்க பொறுப்பு எதுவும் அவருக்கு வழங்காத நிலையில், விரக்தியில் இருந்த அவர் தற்போது தனிக்கட்சி துவக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
நடிகர் விஜய் த.வெ.க., கட்சியை துவக்கி முதல் தேர்தலிலேயே ஆட்சியைப் பிடித்து முதல்வராகவும் ஆகிவிட்டார். இதனால் தமிழக அரசியலில் தற்போது இளைஞர்களிடையே புதிய சிந்தனை ஏற்பட்டுள்ளதாக கருதுகின்றனர். ஒன்றுமே இல்லாமல் வலிமை இழந்த நிலையில் இருந்த பா.ஜ.,வுக்கு எழுச்சியூட்டிய அனுபவம் அண்ணாமலைக்கு உள்ளது. எனவே அவர் தனிக்கட்சி துவங்க வேண்டும் என்று ஆதரவாளர்கள் விரும்புகின்றனர்.
இந்நிலையில்,கோவையில், ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த போஸ்டர்களில் நடிகர் ரஜினிகாந்தின் உருவப்படத்துடன், தலைவா ஆணையிடு அண்ணாமலை மகுடம் சூட என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், ரஜினிகாந்தின் அரசியல் வருகை குறித்த எதிர்பார்ப்பை வெளிப்படுத்தும் வகையிலும் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த போஸ்டர்கள் கோவை நகரின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளதால் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளன.

