மனமுருகி பேசிய ரஜினிகாந்த்.. வீடியோ வெளியிட்டு உருக்கம்..!!
தேவா மறைவிற்கு நடிகர் ரஜினிகாந்த் வீடியோ மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார். "என் நண்பர் தேவா மறைந்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது. 3 மாதங்களுக்கு முன் சந்தித்தபோது, 'இன்றைய இளைஞர்களும் என் பாடல்களை ரசிப்பது மகிழ்ச்சியாக உள்ளது; இந்த சந்தோஷத்தோடு இன்னும் 10, 15 ஆண்டுகள் வாழ்ந்தாலே போதும்' என்றார். ஆனால் இறைவன் அவரை இந்த சந்தோஷத்துடனேயே தன்னிடம் அழைத்துக்கொண்டான்" என்று ரஜினி நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
தேவா அவர்களுடன் தனக்கிருந்த நீண்ட கால நட்பு குறித்து பேசிய நடிகர் ரஜினிகாந்த், அவர் தமிழ் இசை உலகில் பதித்த முத்திரையை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார். இசைஞானி இளையராஜா அவர்கள் கொடிகட்டிப் பறந்த காலத்திலும், தனக்கென ஒரு தனித்துவமான பாதையை அமைத்து வெற்றி கண்டவர் தேவா என்று அவர் புகழாரம் சூட்டினார்.
குறிப்பாக, தேவா இசையமைப்பில் உருவான 'அண்ணாமலை', 'பாட்ஷா', 'அருணாச்சலம்' ஆகிய மூன்று திரைப்படங்களும் தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினிகாந்த்துக்கு மாபெரும் மெகா ஹிட்டாக அமைந்தது.
திரையுலகில் மனிதநேயத்திற்குச் சொந்தக்காரராகத் திகழ்ந்தவர் தேவா என்பதை நினைவுகூர்ந்த ரஜினிகாந்த், தான் இயக்கிய 'படையப்பா' படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மானை இசையமைப்பாளராக ஒப்பந்த செய்வது குறித்து தயக்கத்துடன் இருந்ததாகவும், அப்போது எந்தவித சங்கடமும் கொள்ளாமல் ஏ.ஆர். ரஹ்மானுடன் இணைந்து பணியாற்றச் சொல்லி தாராள மனதுடன் வாழ்த்தியவர் தேவா என்று அவர் குறிப்பிட்டார்.
வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் தெருத்தெருவாக கச்சேரி செய்து தனது குடும்பத்தைக் காப்பாற்றிய உழைப்பாளி தேவா என்று வர்ணித்த ரஜினிகாந்த், அவரிடம் எந்தவிதமான கள்ளம், கபடம், பொய் மற்றும் வஞ்சகம் கிடையாது என்றார். மிகச் சிறந்த மனிதராக வாழ்ந்த காரணத்தினாலேயே, தேவா மகிழ்ச்சியாக இருக்கும்போதே ஆண்டவன் அவரை அழைத்துக்கொண்டான் என்று ரஜினிகாந்த் உருக்கமாகத் தெரிவித்தார். தேவாவின் திடீர் மறைவு தமிழ் திரையுலகிற்கு மாபெரும் இழப்பு என்றும், அவரது நினைவுகள் என்றும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கும் என்றும் கூறி ரஜினிகாந்த் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

