விஜய்யின் திமுக எதிர்ப்பு அரசியல் அதிமுகவிற்கு பலம்- ராஜேந்திர பாலாஜி

சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடந்த எம்ஜிஆர் பிறந்த தின விழா கொண்டாட்டங்களில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜேந்திர பாலாஜி, “ஈரோடு இடைத்தேர்தல் நேர்மையான தேர்தலாக நடைபெறாது என்பதை கடந்த ஈரோடு, விக்கரவாண்டி தேர்தல் மூலம் அறிந்து கொண்டு தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளது. திமுக ஆட்சியில் இடைத்தேர்தல் என்பது அத்துமீறிய அதிக வரம்பை மீறியதாக இருக்கும் என்பதால் அனைத்து எதிர் கட்சிகளும் ஈரோடு இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளது. திமுக ஆட்சியில் அதிகார அத்துமீறல் என்பது தொடர்கதையான ஒன்றுதான். எனவே மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் இன்ப நிதிக்காக ஆட்சியர் நிற்க வைக்கப்பட்ட அதிகார அத்துமீறல் என்பது புதுமை கிடையாது.
திமுகவை, அதிமுக- தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பதோடு, திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட கட்சிகள் மத்தியிலும் திமுகவிற்கு எதிர்ப்பு உள்ளது. 2026- சட்டமன்ற தேர்தலில் வலுவான கூட்டணி அமைத்து சரியான வியூகம் அமைத்து ராஜ தந்திரமான முடிவை எடுத்து அதிமுக வெற்றி பெறும். நடிகர் விஜய் அரசியலுக்கு வரும்போது இவரால் நிலைக்க முடியுமா? என்ற ஐயப்பாடு இருந்தது உண்மை. ஆனால் இன்று அவரது நிதானமான நடவடிக்கையை பார்க்கும் போது அரசியல் தலைவர்கள் இயங்கும் அளவிற்கு பக்குவப்பட்ட அரசியலை நோக்கி செல்கிறார். விஜய், திமுக மீது வைத்துள்ள அதிருப்தி அதிமுகவிற்கு பலமாக உள்ளது. திமுகவின் ஆணவ அரசியலை அடக்க வேண்டும் என்ற பிரதான கொள்கையோடு விஜய் கட்சி துவங்கியுள்ளது வரவேற்கத்தக்கது” என்றார்.