அதிமுக தனித்துப் போட்டியிட்டால் திமுக தனித்துப் போட்டியிட தயாரா?- ராஜேந்திர பாலாஜி

சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அதிமுக பாக( பூத்) செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் நியமனம் தொடர்பான ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றது.
நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. “மன்மோகன் சிங் பிரதமராக இருந்து மத்தியில் காங்கிரஸ் ஆள்கின்றபோது அறிவாலயத்திலும் கோபாலபுரத்திலும் சோதனை செய்தபோது காங்கிரசுடன் கூட்டணி பேசியது திமுக. சோதனைக்கு பயந்த திமுக தான் அன்றைய தினம் காங்கிரஸோடு கூட்டணி அமைத்தது. ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டதில் திமுக மீது சந்தேகம் இருப்பதாக விசாரணை கமிஷன் வைக்க கூறிய காங்கிரஸ் உடன் திமுக கூட்டணி வைத்துள்ளது. அதேபோன்று ஈழத் தமிழர்களின் படுகொலைக்கு காரணமான காங்கிரசுடன் திமுக கூட்டணி வைத்துள்ளது. இது ஒவ்வாத, ஒப்பாத மக்கள் ஏற்றுக் கொள்ளாத கூட்டணியாகும். இன்றைய தினம் அதிமுகவும், பிஜேபியும் மறைந்த ஜெயலலிதாவால் அமைக்கப்பட்ட வெற்றிக் கூட்டணி. நாங்கள் வெற்றி இலக்கை நோக்கி தான் செல்வோம். நடைபெற உள்ள தேர்தலுக்காக அமைக்கப்பட்ட அற்புதமான கூட்டணி என்று சட்ட வல்லுநர்களும் சமூக ஆர்வலர்களும் தெரிவிக்கின்றனர். இந்தக் கூட்டணியை அற்புதமான, வரவேற்கத்தக்க கூட்டணி என மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர். நீ எதிர்வரும் தேர்தலில் திமுகவை தோற்கடிக்க எண்ணுகின்ற எந்த அரசியல் கட்சியுடனும் நாங்கள் கூட்டணி சேருவோம் என்ற கருத்தை எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்காக, நல்ல எண்ணத்தோடு தமிழ்நாட்டு மக்கள் சுபிட்சமாக வாழ வேண்டும், எல்லா வளமும் பெற வேண்டும், என்பது போன்ற நல்நோக்கத்தோடு தமிழகத்திற்காக உழைக்கின்ற கட்சிகளுடன், திமுகவை எதிர்க்கின்ற கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
அதிமுக பாஜக கூட்டணிக்கு அதிமுக தலைமையிலான எடப்பாடி தான் தலைமை தாங்குவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஒரு ஈழப் போராளி. அவர் தமிழினத்துடன் மிகுந்த பற்று கொண்டவர். திமுகவுடன் கூட்டின் வைக்க மாட்டேன் என்றார். ஈழத் தமிழர்களின் படுகொலைக்கு காரணமான காங்கிரஸ் மற்றும் திமுகவுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்றார். ஆனால் அவர் இப்போது வைத்திருப்பது சந்தர்ப்பவாத கூட்டணி. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எந்த ஒரு அரசியல் கட்சியினர் மீதும் கடுமையான வார்த்தைகளையோ, சொற்களையோ சுமத்தியது கிடையாது. தமிழகத்தின் உரிமைகள் எதிர்காலத்தில் மீட்கப்பட வேண்டும். கடமை உணர்வுடன் எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டு, அனைவருடனும் கலந்து ஆலோசித்து பேசியபின் ஒரு அற்புதமான கூட்டணி அமைத்துள்ளார். அதிமுக பாஜகவும் ஏற்படுத்தியுள்ள கூட்டணி குறித்து மாற்று முகாமில் உள்ள திமுக கூட்டணி கட்சியினர் கருத்து தெரிவித்து பேசுவது அவர்களிடையே பயம் வந்துவிட்டது. எங்கள் கூட்டணி குறித்து ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்குமா? என்று கருத்து தெரிவித்து வரும் திமுக கூட்டணியில் உள்ளவர்களை ராஜீவ் காந்தி ஆன்மாவும், ஈழத் தமிழர்களின் ஆன்மாவும் மன்னிக்குமா?. இன்றைய தினம் ஒருவரை ஒருவர் சந்தேகப்படும் கட்சிகளாக திமுக கூட்டணி உள்ளது. அதிமுக கூட்டணி வெளிச்சத்துடன் உள்ளது. எல்லா மக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய விஷயத்துடன் அமைந்துள்ள கூட்டணி அதிமுக பாஜக கூட்டணி. தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா எப்பொழுதுமே தனது கருத்துக்களை சுதந்திரமாக சொல்லக்கூடியவர். அவர் அதிமுக கூட்டணியில் தேமுதிக இல்லை என கூறவில்லை. ஒவ்வொருவரும் கூட்டணி பற்றி தேர்தல் சமயத்தில்தான் அறிவிப்போம். இன்றைய தினம் அதிமுக பாஜக கூட்டணி அமைக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்தடுத்து ஒவ்வொரு கட்சிகளும் அதிமுக தலைமையிலான எடப்பாடி உடன் கலந்து பேசி முடிவெடுத்து கூட்டணிக்காக தங்களது அறிவிப்பை வெளியிடுவார்கள்.
தேர்தலுக்கான கால அவகாசம் உள்ளதால் அதற்காக பொறுத்திருந்து மென்மேலும் வளமான கூட்டணி அமையும். அதிமுகவை எதிர்க்கக்கூடிய சக்தி திமுகவுக்கு தான் உண்டு. திமுகவை வீழ்த்த அதிமுக தலைமையில் இன்னமும் நிறைய அரசியல் கட்சிகள் கூட்டணிக்கு வர நிறைய வாய்ப்புகள் உள்ளது. மாதம் மாதம் ஓரிரு கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வந்து எதிர்பாராத திருப்பமெல்லாம் நிறைவேறும். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா கொள்கைகளின் அடிப்படையில் தான் தமிழகத்தில் ஆட்சி அமைப்போம். இந்தக் கூட்டணிக்கு எடப்பாடி பழனிச்சாமி தலைமை தாங்குவார் என்பதை பாஜக அறிவித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி செயல்பாடுகளின் மீது அதீதமான நம்பிக்கை வைத்து பாஜக நம்பி கூட்டணி அமைத்துள்ளது. அதிமுக= பாஜக கூட்டணியை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வரும் நிலையில், யாரும் சேராமல் இருந்தால் நமக்கு வசதியாய் இருக்கும் என திமுக நினைத்தது. அதிமுக தனித்து நின்றால் திமுக தனித்து நிற்க தயாரா? இன்றைய தினம் அதிமுக பாஜக கூட்டணியை பார்த்து திமுக பயப்படுகிறது. திமுக அமைச்சர் பெண்களை தவறாக சித்தரித்து மதங்களை புண்படும்படி பேசி வருகிறார். ஆனால் நாங்கள் யாரையும் குறைத்து பேச மாட்டோம். அதிமுக இருக்கும் இடத்தில் அனைத்து தரப்பு மக்களும் பாதுகாக்கப்படுவார்கள். திமுகவுக்கும், த வெகவுக்கும் தான் போட்டி என்று கூறுவது 2025-ம் ஆண்டின் அருமையான ஜோக். அதிமுகவுக்கும், திமுகவுக்கும் தான் போட்டி. ஆனால் நான் தான் என யாரும் இருக்கக்கூடாது. தமிழக வெற்றி கழகம் களத்திலும், இடத்திலும், எந்ததிலும் கிடையாது. இன்றைய தினம் களத்தில் திமுகவா? அதிமுகவா? வெல்லப் போவது யார் என்பதுதான். மதம் கொண்ட யானை திமுக. சினம் கொண்ட சிங்கம் அதிமுக. சிங்கத்துடன் மதம் கொண்ட யானை தோற்று ஓடுவது தான் வரலாறு. எனவே அதிமுக வரலாறு படைக்கும். வெற்றி பெறும். ஆட்சி அமைக்கும். எடப்பாடி முதலமைச்சர் ஆவார். எல்லா வழிகளிலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களை பாதுகாக்கும் தலைவராய் இருக்கும் எடப்பாடி முதல்வராக வேண்டும். இன்றைய தினம் சட்டமன்றத்தில் கதாநாயகனாக எடப்பாடி பழனிச்சாமி உள்ளார். திமுக ஆட்சியை இன்னமும் யாரும் தாங்கிப் பிடிக்க முடியாது. திமுக ஒரு மூழ்கும் கவிழும் முடிந்து போன கப்பல். அதிமுக கரை சேரும் கப்பல். அதிமுக கப்பலில் ஏறினால் சென்னை துறைமுகத்திற்கு சென்று கோட்டையில் ஆட்சியை பிடிக்கும். எல்லா அரசியல் கட்சியிலும் பிரச்சனை வருவது போல் பாட்டாளி மக்கள் கட்சியிலும் பிரச்சனைகள் வந்து ரெண்டு மாதத்திற்கு முன்பு வந்த பிரச்சனை தீர்க்கப்பட்டது போல் தற்போது உள்ள பிரச்சனையையும் சரி செய்து விடுவார்கள். அதிமுகவை நம்பி சிறுபான்மை மக்கள் கெட்டதாக வரலாறு கிடையாது. நாங்கள் சிறுபான்மை மக்களுக்கு பக்க பலமாக இருப்பதால் அதிமுகவுக்கு சிறுபான்மை மக்களின் வாக்குகள் விழும்” என்றார்.