ராஜஸ்தான் இளைஞரின் மாத சம்பளம் ₹10,000... திடீரென வங்கிக்கு வந்த ₹10,000 கோடி..!

 
1

ராஜஸ்தான் மாநிலம் சீகர் பகுதியில் உள்ள சாலாசர் பேருந்து நிலையம் அருகே இயங்கி வரும் 'நிர்மல் மெடிக்கல் பாயிண்ட்' என்ற மருந்தகத்தில் வேலை பார்த்து வருபவர் சமீர் கான் (22). கடந்த புதன்கிழமை அன்று தனது மொபைல் எண்ணிற்கு ரீசார்ஜ் செய்வதற்காக வங்கி ஆப் (Banking App) மூலம் தனது கணக்கில் உள்ள இருப்பைச் சோதித்துள்ளார்.

அப்போது கணக்கில் பணம் ஏதும் இல்லாமல் 'பூஜ்ஜியம்' (Zero) என்று காட்டியதால் அதிர்ச்சியடைந்த அவர், விவரங்களைச் சரிபார்த்தபோது அவரது கணக்கில் ₹10,000 கோடி 'லியன்' (Lien - தற்காலிக முடக்கம்) செய்யப்பட்டுள்ளதாகக் காட்டப்பட்டுள்ளது. இதனால் அவரது சொந்தப் பணமான ₹55,000 தொகையையும் எடுக்க முடியாமல் முடங்கியது.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சமீர் கான், உடனடியாகத் தனது கடை உரிமையாளர் தீரஜ் சர்மாவிடம் விஷயத்தைக் கூறியுள்ளார். இருவரும் இணைந்து சீகர் சைபர் காவல் நிலையத்தை அணுகிய நிலையில், காவல்துறை அதிகாரிகள் வங்கி அதிகாரிகளை நேரில் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து வங்கி அதிகாரிகளைச் சந்தித்தபோது, இது தொழில்நுட்பக் கோளாறால் (Technical Glitch) ஏற்பட்ட தவறு என்பது தெரியவந்தது. உடனடியாக வங்கி நிர்வாகம் அந்தத் தொழில்நுட்பக் கோளாறைச் சரிசெய்து, சமீர் கானின் கணக்கில் இருந்த உண்மையான இருப்பான ₹55,000 தொகையை மீண்டும் பயன்படுத்த வழிவகை செய்தது.

இது குறித்துப் பேசிய சமீர் கான், "என் கணக்கில் ஏற்கனவே ₹55,000 இருந்தது. திடீரென ₹10,000 கோடி லியன் செய்யப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ந்துபோனேன். என்னிடம் இருந்த சொந்தப் பணத்தைக் கூட எடுக்க முடியவில்லை. காவல் நிலையம் மற்றும் வங்கியைத் தொடர்பு கொண்ட பிறகு பிரச்சினை சரியானது" என்றார்.

கடை உரிமையாளர் தீரஜ் சர்மா கூறுகையில், "சமீர் கான் கடந்த ஜனவரி முதல் என்னிடம் ₹10,000 சம்பளத்திற்கு வேலை பார்த்து வருகிறார். தனது கணக்கில் ₹10,000 கோடி முடக்கப்பட்டிருப்பதாகக் கூறியதும் நான் மிரண்டுவிட்டேன். என் வாழ்நாளில் இப்படி ஒரு சம்பவத்தைப் பார்த்ததே இல்லை" எனக் குறிப்பிட்டார்.