ஓபிஎஸ் அரசியலை விட்டு ஓடி ஒளிந்து விட்டார்- ராஜன் செல்லப்பா

ஓபிஎஸ் அரசியலை விட்டு ஓடி ஒளிந்து விட்டார், குடும்பத்தினருக்கு அரசியலில் இடம் இல்லை என அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே தனக்கன்குளத்தில், மறைந்த ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொடியேற்று விழாவில் கலந்துகொண்டு பேசிய அதிமுக எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா, “ஓ.பன்னீர்செல்வம் ஓடி ஒளிந்துவிட்டார். அரசியலுக்கு அவரோ, அவரது குடும்பத்தினருக்கோ தகுதி இல்லாமல் ஓடி ஒளிந்துவிட்டனர் . மூன்று முறை முதலமைச்சர் பதவியில் இருந்த ஓபிஎஸ், மக்களுக்காக எந்த வித திட்டங்களையும், பணிகளையும் செய்யவில்லை. நான்கு வழி சாலை வழியே செல்லக்கூடிய ஓபிஎஸ், எந்த பணிகளை செய்தார் என்று சொல்ல முடியுமா? அவரால் எதுவும் செய்ய முடியாத ஓபிஎஸ் தற்போது ஓடி ஒளிந்துள்ளார். அதிமுகவிற்கு தேர்தலின் போது ஒரு முறை தோல்வி என்றால், மறுமுறை வெற்றி. இதுவே அதிமுகவின் வரலாறு” எனக் கூறினார்.
முன்னதாக அப்பகுதியில் எடப்பாடியார் அவர்களே வருக என பொறிக்கப்பட்ட பிளக்ஸ் பேனர்களை வைத்துள்ளதால் சர்ச்சை ஏற்பட்டது. பழைய பிளக்ஸ் பேனர்களை வைத்து விழா நடத்தியதால், அப்பகுதி மக்கள் எடப்பாடி தான் வருவதாக புலம்பிக் கொண்டிருந்தனர். ஆனால் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா - வை வரவேற்பதற்காக பழைய பிளக்ஸ் பேனர்களை வைத்திருந்ததால் சலசலப்பு ஏற்பட்டது.