சூறைக்காற்றுடன் மழை.. பெங்களூரு செல்ல இருந்த 6 விமானங்கள் சென்னையில் லேண்டிங்..
மோசமான வானிலை காரணமாக பெங்களூரில் தரையிறங்க வேண்டிய, மலேசியா, தாய்லாந்து சர்வதேச விமானங்கள் உட்பட, 6 பயணிகள் விமானங்கள் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கின.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் நேற்று இரவு பலத்த சூறைக்காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. நள்ளிரவுக்கு மேற்பட்டும் மோசமான வானிலை நிலவியதால் பெங்களூர் விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து பெங்களூர் செல்ல இருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், தாய்லாந்து நாட்டின் பேங்காக்கில் இருந்து பெங்களூர் செல்ல இருந்த தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஆகியவை சென்னை திருப்பிவிடப்பட்டு, சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியது.

இதெபோல் டெல்லி - பெங்களூர் இடையேயான இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், கொராக்பூர் - பெங்களூர் இடையேயான ஆகாஷா ஏர்லைன்ஸ் விமானம், ராஞ்சி - பெங்களூர் இடையேயான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், அகமதாபாத் - பெங்களூர் இடையேயான இண்டிகோ ஏர்லைன்ஸ் பயன்பாடுகள் விமானம் ஆகிய ஆறு உள்நாட்டு பயணிகள் விமானங்கள் பெங்களூரில் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டது. தொடர் மழை காரணமாக இந்த விமானங்கள் நேற்று சென்னைக்கு திருப்பிவிடப்பட்டன.
இந்த ஆறு விமானங்களும், நள்ளிரவில் சென்னை விமான நிலையம் வந்து தரை இறங்கின. பயணிகள் அனைவரும், விமானங்களிலேயே அமர வைக்கப்பட்டனர். அந்தந்த ஏர்லைன்ஸ் சார்பில், பயணிகளுக்கு குடிநீர், உணவு போன்றவைகள் வழங்கப்பட்டன. அதன் பின்பு இன்று அதிகாலை பெங்களூரில் வானிலை சீரான பின்பு, சென்னை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 6 விமானங்கள், ஒன்றன்பின் ஒன்றாக சென்னையில் இருந்து பெங்களூர் புறப்பட்டு சென்றன.


