தமிழகத்தில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்..
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 6 நாட்களுக்கு ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (ஆக.28) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி,மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆக.29 முதல் ஆக.30 ஆம் தேதி வரை, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி,மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், வலுவலான தரைக்காற்று 30 முதல் 40 கி.மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஆக.31 முதல் செப்.3 ஆம் தேதி வரை, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.