சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு

 
rain

ஆசானி புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னை வானிலை ஆய்வும் மையம் வெளியிட்டுள்ள வானிலை முன் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நேற்று தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில்  நிலவிய “அசானி”  புயல் நேற்று மாலை தீவிர புயலாக வலுப்பெற்று  தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவியது. இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று  காலை 08:30 மணி அளவில் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு வங்கக்கடல் பகுதிகளில்  நிலவுகிறது. இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை வடஆந்திரா -ஒரிசா கடற்கரை ஒட்டிய மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வட மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவக் கூடும். அதன்பிறகு வடக்கு-வடகிழக்கு திசையில் ஒரிசா கடற்கரை ஒட்டிய வட மேற்கு வங்க கடல் பகுதியை நோக்கி நகரக் கூடும். இது அடுத்த 36 மணி நேரத்தில் படிப்படியாக புயலாக வலுவிழக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

rain

இந்நிலையில் ஆசானி புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல் இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், 13ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.