"சென்னையில் நள்ளிரவு முதல் மீண்டும் மழை..."

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்திற்கும் மேலாக மழை விட்டிருந்த நிலையில், நள்ளிரவு முதல் சென்னையின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடந்த 14 மற்றும் 15 ஆம் தேதி சென்னையில் அதி கனமழை கொட்டி தீர்த்தது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டதால், சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களுக்கு 16 மற்றும் 17ம் தேதிகளில் அதிகனமழை இருக்கக்கூடும் என ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திர மாநிலம் நெல்லூர் இடையே நேற்று கரையைக் கடந்ததால், இரண்டு நாட்களாக மழை சற்று ஓய்ந்திருந்தது. சொல்லப்போனால் நேற்றைய தினம் சென்னையில் வெயில் அடிக்க ஆரம்பித்து விட்டது.
ஆனாலும் இது வடகிழக்கு பருவமழைக் காலம் என்பதால் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்திருந்தது. குறிப்பாக வட தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதன் காரணமாக கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படியே சென்னையில் பல பகுதிகளில் நள்ளிரவு முதல் லேசானது மற்றும் மிதமான மழை பெய்தது. சில இடங்களில் காலை வரை மழை நீடித்து வருகிறது.
அந்தவகையில் சென்னையில் அண்ணா சாலை, கிண்டி, சைதாப்பேட்டை, பம்மல், குரோம்பேட்டை, தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, நந்தனம், தி.நகர், செம்மஞ்சேரி, அரசன்கழனி, ஓ.எம்.ஆர் சாலை, சோழிங்கநல்லூர், சித்தாலப்பாக்கம், எம்.ஆர்.சி நகர், மந்தவெளி, அடையார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நள்ளிரவு மீண்டும் மழை பெய்தது. அதேபோல் அம்பத்தூர், ஆவடி, திருமுல்லைவாயல், பட்டாபிராம், திருநின்றவூர் ஆகிய புறநகர் பகுதிகளிலும் இடியுடன் கூடிய லேசான மழை பெய்து வருகிறது. சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.