ரயில்வேயின் புதிய முயற்சி..! வானிலை மாற்றங்களையும் வென்ற 'மில்க் எக்ஸ்பிரஸ்'!

 
1

ஜம்மு - காஷ்மீரின் நகரங்களை இணைக்கும் வகையில் ரயில் போக்குவரத்து ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால், மக்களுக்கான அத்தியாவசியப் பொருட்களை தடையின்றி கிடைக்க செய்யும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதன்படி, குஜராத்தின் லிஞ்ச் பகுதியில் உள்ள சரக்கு தளத்தில் இருந்து முதன் முறையாக அமுல் நிறுவனத்தின் பால் பொருட்களான பால், பால் பவுடர், வெண்ணெய், தயிர், மோர், லஸ்ஸி உள்ளிட்டவை ஜம்மு - காஷ்மீருக்கு கடந்த 20ம் தேதி அனுப்பப்பட்டன. 
மொத்தம் 1,000 டன் எடையுள்ள பால் பொருட்களுடன் சென்ற இந்த சரக்கு ரயில், ஜம்மு - காஷ்மீருக்கு 22ம் தேதி வந்தடைந்தது. 
முழுதும் குளிரூட்டப்பட்ட கொள்கலன்களில் இவை அனுப்பப்பட்டன. சாலை மார்க்கமாக செல்வதை விட ரயில் மூலம் கொண்டு வருவது போக்குவரத்து செலவை குறைப்பதோடு, மோசமான வானிலை காலங்களிலும் தடையற்ற வினியோகத்தை இந்த ரயில் போக்குவரத்து உறுதி செய்யும். 

இந்த சரக்கு ரயில் வெற்றிகரமாக இலக்கை அடைந்ததை குறிப்பிட்ட ரயில்வே அதிகாரிகள், இது ஒரு வரலாற்று சாதனை என குறிப்பிட்டனர். 

இதன்மூலம் மாநிலங்களுக்கு இடையே வர்த்தகத்திற்கு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தக்கூடும் எனவும் தொலைதுார பகுதிகளுடனான இணைப்பை மேம்படுத்துவதற்கான ரயில்வேயின் ஒரு பரந்த முயற்சியாக இது விளங்குகிறது. அத்தியாவசியப் பொருட்களின் சீரான வினியோகம் மூலம் அப்பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்படாமல், விலை உயர்வை கட்டுப்படுத்தும் எனவும், இந்த முன்னெடுப்பு ஜம்மு - காஷ்மீரை தேசிய வினியோக வலையமைப்புகளுடன் சிறப்பாக ஒருங்கிணைக்க உதவும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.