ஜூலை 15 முதல் அறிமுகமாகும் புதிய அதிவேக IRCTC இணையதளம் - ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்..!
ஜெய்ப்பூர் மாளவியா தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் நடந்த மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்வில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பங்கேற்றார். அப்போது மாணவர் ஒருவர், “ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்வதில் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக, 'கேப்ட்சா' எனப்படும், பாதுகாப்பு சரிபார்ப்பு குறியீடு முறை, தட்கால் டிக்கெட் முன்பதிவு நேரங்களில் ஏற்படும் இணையதள முடக்கம் மற்றும் ஓ.டி.பி., எனப்படும் ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல் கிடைப்பதில் தாமதம் போன்றவற்றால் லட்சக்கணக்கான பயனர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு தீர்வு கிடைக்குமா?” என, கேள்வி எழுப்பினார்.இதற்கு பதில் அளித்த அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்,'ஜூலை 15ம் தேதி முதல் ஐ.ஆர்.சி.டி.சி.,யின் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் கூடிய அதிவேக இணையதளம் பயன்பாட்டுக்கு வரும்' என, உறுதி அளித்தார்.
ஐ.ஆர்.சி.டி.சி., மட்டுமின்றி, இதர அங்கீகரிக்கப்பட்ட, 'இ - கேட்டரிங்' நிறுவனங்கள் வாயிலாகவும், ரயில் பயணியருக்கு உணவு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், அங்கீகரிக்கப்படாத சில நிறுவனங்கள், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சான்றிதழ் பெறாமல், சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாமல், 'இ-கேட்டரிங்' வாயிலாக, சுகாதாரமற்ற உணவுகள் விநியோகம் செய்யப்படுவதாக, பயணியர் தரப்பில் புகார்கள் வந்தன. இந்நிலையில், அங்கீகரிக்கப்படாத, 14 'இ-கேட்டரிங்' இணையதளங்கள் கண்டறியப்பட்டு முடக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பயணியர் தங்கள் ரயில் பயணத்தின் போது தேவைப்படும் உணவை, ஐ.ஆர்.சி.டி.சி.,யின் அதிகாரப்பூர்வ, 'இ.கேட்டரிங்' இணையதளமான, 'புட் ஆன் ட்ராக்' மொபைல் செயலி அல்லது ஐ.ஆர்.சி.டி.சி.,யால் அங்கீகரிக்கப்பட்ட உணவு விநியோகஸ்தர்கள் மற்றும் விற்பனையாளர்கள் வாயிலாக மட்டும், முன்பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

