சந்திரயான் 3 வெற்றி- ராகுல்காந்தி, கே.எஸ்.அழகிரி வாழ்த்து

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) அனுப்பியுள்ள சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் இன்று மாலை வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது.
இதற்கு வாழ்த்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “சந்திரயான்-3 வெற்றி பெற்றதற்கு இஸ்ரோ குழுவிற்கு வாழ்த்துகள், நிலவின் தென்துருவத்தில் இந்தியா முதன்முதலாக கால் பதித்திருப்பது, நம் அறிவியல் சமூகத்தின் பல ஆண்டுகால கடின உழைப்பின் விளைவாகும். 1962ம் ஆண்டு முதல் இந்திய விண்வெளித்துறையின் திட்டங்கள் புதிய உயரங்களை எட்டி வருவதோடு இளம் தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கும் வகையிலும் உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, “விண்வெளியில் வரலாறு படைக்க இன்று மாலை திட்டமிட்டபடி விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கியிருப்பதை கண்டு உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து மகிழ்ச்சிக் கடலில் திளைத்திருக்கிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோவை நிறுவியவர் விக்கிரம் சாராபாய். இதற்கு உறுதுணையாக இருந்தவர் ஹோயி பாபா. இவர்கள் இருவரையும் ஒருங்கிணைத்து அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் தேசிய விண்வெளி ஆராய்ச்சிக் குழுவை 1962 இல் நிறுவினார். அந்த முயற்சி இன்றைக்கு வெற்றிபெற்று சந்திரயான் 3 லாண்டர் நிலவில் தரை இறங்கியிருப்பதன் மூலம் இந்தியாவின் பெருமை உலக அரங்கில் பலமடங்கு கூடியிருக்கிறது. இதற்காக அரும்பாடுபட்ட இஸ்ரோ விஞ்ஞானிகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.