நாளை ஸ்ரீபெரும்புதூர் வரவிருந்த ராகுல்காந்தியின் பயணம் திடீர் ரத்து!!

 
Rahul

நாளை (மே21) ஸ்ரீபெரும்புதூர் வரவிருந்த  ராகுல்காந்தியின் பயணம் திடீர் ரத்தாகியுள்ளது.

இதுக்குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், "முன்னாள் பாரத பிரதமர், பாரத ரத்னா திரு. ராஜிவ்காந்தி அவர்களின் 32-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, ஸ்ரீபெரும்புதூரில்  நாளை (21.5.2023) ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணியளவில் நடைபெறவுள்ள அஞ்சலி நிகழ்ச்சியில் தலைவர் ராகுல்காந்தி அவர்கள் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டது. தவிர்க்க முடியாத காரணங்களால் அவரது வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே திட்டமிட்டபடி, நாளை ஸ்ரீபெரும்புதூர் ராஜிவ் காந்தி அவர்களின் நினைவிடத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கே.எஸ்.அழகிரி அவர்கள் தலைமையில், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ., முன்னிலையில் கீழ்க்கண்டவாறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

rahul

காலை 8.00 மணி : ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள ராஜீவ்காந்தி அவர்களின் நினைவிடத்தில்  மலர் தூவி மரியாதை செலுத்துதல், மருத்துவ முகாமினை துவக்கி வைத்தல்,  நினைவிடத்தில் தேசபக்தி பாடல்களை இசைக்குழுவினர் பாடுகிறார்கள். தொடர்ந்து பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்படும். நினைவுநாள் நிகழ்ச்சிகளை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் திரு. டி.என். முருகானந்தம், காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்  திரு. அளவூர் நாகராஜன், ஸ்ரீபெரும்புதூர் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. அருள்ராஜ் ஆகியோர் ஒருங்கிணைத்து செயல்படுவார்கள்.

rahul gandhi

காலை 10.30 மணி : சைதாப்பேட்டை சின்னமலையில் அமைந்துள்ள அமரர் ராஜிவ்காந்தி அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துதல். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தென்சென்னை மத்திய மாவட்டத் தலைவர்  திரு. எம்.ஏ. முத்தழகன் செய்துள்ளார். காலை 11.00 மணி : சென்னை சத்தியமூர்த்தி பவனில் ராஜீவ்காந்தி அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்துதல்.  இந்நிகழ்ச்சிகளில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், செயல் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள், நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்கின்றனர்" என்று குறிப்பிட்டுள்ளார்.