மோடி அரசு வனஉரிமை சட்டத்தை உறுதியாக பாதுகாக்க வேண்டும் - ராகுல் காந்தி வலியுறுத்தல்!

மோடி அரசு உண்மையாகவே பழங்குடியினரின் உரிமைகளை பாதுகாக்க விரும்பினால், லட்சக்கணக்கான குடும்பங்களை வெளியேற்றத்திலிருந்து காப்பாற்ற விரும்பினால், உடனடியாக நடவடிக்கை எடுத்து, வனஉரிமைச் சட்டத்தைக் கோர்ட்டில் உறுதியாக பாதுகாக்க வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வன உரிமைச் சட்டங்களை மோடி அரசு புறக்கணிபப்பதால் லட்சக்கணக்கான பழங்குடியினர் குடும்பங்கள் தங்கள் பாரம்பரிய நிலங்களில் இருந்து வெளியேற்றப்படும் சிரமத்தை எதிர்கொண்டிருக்கின்றனர். 2006ல், காங்கிரஸ் வனஉரிமைச் சட்டத்தை (FRA) உருவாக்கியது, இதன் மூலம் பழங்குடியினருக்கு நீர், காடு மற்றும் நிலத்தில் உரிமை வழங்கி, வரலாற்று அநீதியை சரிசெய்வதை நோக்கமாகக் கொண்டது. ஆனால் மத்திய அரசின் செயலற்ற தன்மையால், இந்தச் சட்டத்தின் கீழ் செய்யப்பட்ட லட்சக்கணக்கான உண்மையான கோரிக்கைகள் எந்தவித பரிசீலனையும் இல்லாமல் நிராகரிக்கப்பட்டுள்ளன. 2019ல், உச்ச நீதிமன்றம் நிராகரிக்கப்பட்ட கோரிக்கையாளர்களை வெளியேற்ற உத்தரவிட்டது, இதனால் நாடு முழுவதும் பெரும் எதிர்ப்புப் போராட்டங்கள் உருவானது.
பின்னர், நீதிமன்றம் வெளியேற்றத்தைக் தடுத்து, நிராகரிக்கப்பட்ட கோரிக்கைகளை மீண்டும் முழுமையாக பரிசீலிக்க உத்தரவிட்டது. இப்போது இந்த வழக்கு மறுபடியும் உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது – ஆனால் மீண்டும், மோடி அரசு காணாமல் போயுள்ளது. 2019லேயே இந்தச் சட்டத்தைக் காக்க அது முயலவில்லை, இன்றும் பழங்குடியினர் உரிமைகளை ஆதரிக்க எந்த முனைப்பையும் காட்டுவதில்லை. அதைவிட மோசமானது, இப்போது வரை லட்சக்கணக்கான நிராகரிக்கப்பட்ட மற்றும் நிலுவையில் உள்ள கோரிக்கைகளை மீண்டும் பரிசீலிக்க எந்தத் தீர்க்கமான முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை என்பதே மிகுந்த கவலையளிக்கிறது. மோடி அரசு உண்மையாகவே பழங்குடியினரின் உரிமைகளை பாதுகாக்க விரும்பினால், லட்சக்கணக்கான குடும்பங்களை வெளியேற்றத்திலிருந்து காப்பாற்ற விரும்பினால், உடனடியாக நடவடிக்கை எடுத்து, வனஉரிமைச் சட்டத்தைக் கோர்ட்டில் உறுதியாக பாதுகாக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.