ராகுல் காந்திக்கு கடைசி வரிசையில் இருக்கை.. அவமதிக்கும் செயல் என செல்வப்பெருந்தகை கண்டனம்..

 
selvaperunthagai selvaperunthagai


சுதந்திர தின விழாவில் மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு கடைசி வரிசைக்கு முன் இடம் ஒதுக்கியிருப்பதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடாளுமன்றத்தில் மக்களவையின் அங்கீகரிக்கப்பட்ட எதிர்கட்சித் தலைவராக பொறுப்பு வகிக்கின்ற திரு ராகுல் காந்தி அவர்களை தலைநகர் டெல்லியில் இன்று(நேற்று) நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கடைசி வரிசைக்கு முன் வரிசையில் இடம் ஒதுக்கி ஒன்றிய பா.ஜ.க. அரசு அவமதித்துள்ளது. இதற்கு விளக்கம் அளிக்கிற பாதுகாப்பு அமைச்சகம் ஒலிம்பிக் வீரர்களை கௌரவப்படுத்த அவர்களை முன் வரிசையில் அமர்த்தியதால் இந்த நிகழ்வு ஏற்பட்டதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. 

ராகுல் காந்திக்கு கடைசி வரிசையில் இருக்கை.. அவமதிக்கும் செயல் என செல்வப்பெருந்தகை கண்டனம்..

ஒன்றிய கேபினெட் அமைச்சர்களாக இருக்கிற ராஜ்நாத் சிங், அமித் ஷா, ஜெ.பி. நட்டா, நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு முன்வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் என்பது கேபினெட் அமைச்சர்களுக்கு இணையான பதவியாகும். அந்த வகையில் பார்க்கும்போது கேபினெட் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தின் அருகில் இடம் ஒதுக்காமல் பின் வரிசையில் இடம் ஒதுக்கியிருப்பது உள்நோக்கம் கொண்ட நடவடிக்கை ஆகும். அதேபோல அகில இந்திய காங்கிரஸ் தலைவர் திரு மல்லிகார்ஜூன் கார்கே அவர்களுக்கு ஐந்தாவது வரிசையில் தான் இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. 

பாராளுமன்ற ஜனநாயகத்தில் மிகுந்த எழுச்சியோடு ஆற்றல் மிக்கவராக திரு.ராகுல் காந்தி அவர்கள் செயல்படுவதை சகித்துக்கொள்ள முடியாத மோடி அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு இத்தகைய மலிவான செயல்களில் ஈடுபட்டு வருவதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.