கட்சியில் உச்சக்கட்ட சலசலப்பு- தமிழகம் வரும் ராகுல், பிரியங்கா
சென்னை இராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு கூட்டம் அக்கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் புதிய மாவட்டத் தலைவர்கள் நியமனத்திற்குப் பிறகு நடைபெற்ற முதல் செயற்குழு கூட்டம் இதுவாகும். இந்த கூட்டத்தில் 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் ஆயத்தப் பணிகள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஆக்கப் பணிகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் சூரஜ் எம்.என். ஹெக்டே, நிவேதித் ஆல்வா, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜேஷ்குமார், ஆகியோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பங்கேற்க 52 செயற்குழு உறுப்பினர்கள், 39 சிறப்பு அழைப்பாளர்கள் என 91 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 60 பேர் மட்டுமே பங்கேற்றனர்.

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், “2025ம் ஆண்டு என்பது காங்கிரஸின் மறு கட்டமைப்புக்கான ஆண்டு. இதனையொட்டியே தமிழ்நாட்டி புதிய காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் நியமிக்கப்பட்டனர். 14 மாநிலங்களில் 530 மாவட்டத் தலைவர்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளனர். மாவட்டத் தலைவர்கள் மெரிட் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 6 மாதங்கள் மாவட்ட தலைவர்களின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படும். அவர்கள் சரியாக பணியாற்றப்படவில்லை எனில் மாற்றப்படுவார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 3 மாவட்ட தலைவர்கள் இன்னும் 3 தினங்களில் அறிவிக்கப்படும், 4 பெண் மாவட்ட தலைவர்கள் திறமையின் அடிப்படையில் நியமிக்கப்பட்டு உள்ளனர். 13 மாவட்ட தலைவர்கள் சிறுபான்மையினர் நியமிக்கப்பட்டு உள்ளனர். புதிய மாவட்ட தலைவர்களுக்கு 10 நாட்கள் பயிற்சி வழங்கப்பட உள்ளது. மாவட்ட தலைவர்களின் செயல்பாடுகள் 6 மாதங்கள் ஆய்வு செய்யப்படும், திருப்தி இல்லையென்றால் மாற்றப்படுவார்கள்.

தமிழகத்தில் கிராம கமிட்டி மாநாடு நடைபெற உள்ளது. இதில் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர், தேதியும் இடமும் பின்னர் அறிவிக்கப்படும். கூட்டணி நிலைபாடு குறித்து தேசிய தலைமை விரைவில் அறிவிக்கும். காங்கிரஸ் நிர்வாகிகள் 42 பேரிடம் டெல்லியில் தனித்தனியாக கருத்துக்களை கேட்டு அறிந்தனர். கருத்துக்களின் அடிப்படையில் பரிசீலித்து அகில இந்திய காங்கிரஸ் அறிவிப்பை வெளியிடும், எங்களிடம் கருத்து கேட்கப்பட்டிருக்கும். கூட்டணி குறித்த அறிவிப்பை தேசிய தலைமைதான் வெளியிடும். தமிழகம் தேர்தல் ஆயத்தப் பணிக்காக ராகுல், பிரியங்கா தமிழகம் வரவுள்ளனர்” என்றார்.


