மின்வாரிய தலைவராக இருந்த ராதாகிருஷ்ணன் அண்ணா நிர்வாக கல்லூரி இயக்குநராக பணியிட மாற்றம்..!
மின்வாரிய தலைவராக இருந்த ராதாகிருஷ்ணன், வனத்துறைச் செயலாளராக இருந்த சுப்ரியா சாஹு உள்பட பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சாய்குமார் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவராக இருந்த ராதாகிருஷ்ணன், அண்ணா நிர்வாக கல்லூரி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். வனத்துறை, சுற்றுச்சூழல் பருவநிலை மாற்றத்துறையின் கூடுதல் செயலாளராக இருந்த சுப்ரியா சாஹு, தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநராக இருந்த உமாநாத், தற்போது தொழில்துறை ஆணையர் மற்றும் வணிக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். தொழில்துறை ஆணையர் மற்றும் வணிக இயக்குநராக இருந்த நிர்மல் ராஜ் பணியிட மாற்றம் செய்யப்பட்டு போக்குவரத்துத் துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் செயலாளராக இருக்கும் பிரதீப் யாதவ் இடமாற்றம் செய்யப்பட்டு, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தகவல் தொழில்நுட்பத் துறையின் செயலாளராக அதுல் ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
பொது மற்றும் மறுவாழ்வுத்துறையின் சிறப்புச் செயலாளராக உள்ள சுந்தரவல்லி, தற்போது பொது மற்றும் மறுவாழ்வுத்துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பொது மற்றும் மறுவாழ்வுத்துறையின் செயலாளராக இருந்த காகர்லா உஷா, சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலை மாற்றத்துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உயர்கல்வித்துறைச் செயலாளராக தீரஜ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக ரத்னா, தொழிலாளர் ஆணையராக வள்ளலார், போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்புத்துறையின் முதன்மைச் செயலாளராக தாமஸ் வைத்தியன், கலை மற்றும் கலாச்சாரத்துறை இயக்குநராக மகேஸ்வரி ரவிக்குமார், அருங்காட்சியகங்களின் இயக்குநராக பாஸ்கர பாண்டியன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். நில நிர்வாக ஆணையராக இருந்த கஜலட்சுமி, மதுவிலக்கு மற்றும் கலால் துறையின் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுவிலக்கு மற்றும் கலால் துறையின் ஆணையராக இருந்த பூஜா குல்கர்னி, தற்போது தமிழ்நாடு உள்கட்டமைப்பு அபிவிருத்தி வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

