தமிழ்நாட்டில் குவாரிகள் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களின்படியே வகுக்கப்பட்டுள்ளன -அமைச்சர் துரைமுருகன்

 
durai murugan

தமிழ்நாட்டில் குவாரிகள் இயங்குவதற்கான விதிகள், மாண்பமை உச்சநீதிமன்ற ஆணைகள் மற்றும் ஒன்றிய அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படியே வகுக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் துரைமுருகன் விளக்கமளித்துள்ளார்.

இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் குவாரிகள் இயங்குவதற்கான விதிகளில் மாண்பமை உச்சநீதிமன்ற ஆணைகள் மற்றும் ஒன்றிய அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படி, சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள சூழ்நிலையில், சிலர் இதுகுறித்து தவறான தகவல்களைப் பரப்புவதால். மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் திரு. துரைமுருகன் அவர்கள் இன்று (6-1-2023) அரசின் சார்பில் பின்வரும் விளக்கத்தினை அளித்துள்ளார்.

duraimurugan
* 1959 முதல் 03.11.2021-க்கு முன்பு வரை, காப்புக்காடுகளின் எல்லைகளிலிருந்து 60 மீ. சுற்றளவிற்குள் எந்தவித குவாரிப் பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என்ற நிபந்தனையுடன், காப்புக்காடுகளின் அருகிலுள்ள பட்டா மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் குத்தகை உரிமம் வழங்கப்பட்டு வந்தது.
• குவாரிப் பணிகளை மேற்கொள்ளும்போது, வரலாற்றுச் சின்னங்கள், பழந்தமிழர் கல்வெட்டுகள், சமணப்படுக்கை மற்றும் தொல்பொருள் தளங்கள் பாதுகாக்கப்படும் என்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து. 03.11.2021 நாளிட்ட அரசாணையின்படி, 1959 ஆம் ஆண்டு தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகளில், விதி 36 (1A)-ல் உபவிதி (d) மற்றும் (e) சேர்க்கப்பட்டது. இந்த விதி சேர்க்கப்பட்டதன் காரணமாக காப்புக்காடுகள் அமைந்துள்ள பகுதிகளின் எல்லையிலிருந்து 1 கி.மீ. சுற்றளவிற்குள் அமைந்துள்ள குவாரிகள். சுரங்கங்கள் மற்றும் கல் அரவை ஆலைகளில் பணிகள் பாதிக்கப்படுவதாக குவாரி உரிமையாளர்கள் பலமுறை நேரில் சந்தித்து முறையிட்டு வந்தார்கள். தமிழ்நாடு கனிம நிறுவனத்திற்கு (TAMIN) குத்தகை உரிமம் வழங்கப்பட்டுள்ள 19 குவாரிகள் உட்பட 200-க்கும் மேற்பட்ட குவாரிகள் மற்றும் சுரங்கங்கள் தமிழகத்தில் காப்புக்காடுகள் அமைந்துள்ள பகுதிகளின் எல்லைகளிலிருந்து 1கி.மீ. சுற்றளவிற்குள் ஏற்கனவே 2021 நவம்பர் வரை இயங்கி வந்தன. 2021 நவம்பர் மாதத்தில் இயற்றப்பட்ட புதிய விதியின் காரணமாக மேற்கண்ட குவாரிகளில் குவாரிப் பணிகள் பாதிப்படைந்ததோடு, பெரும்பாலான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பினை இழந்து பாதிப்புக்குள்ளாயினர்.

govt

இந்நிலையில், 19.04.2022 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், 1959 ஆம் ஆண்டு தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகளில் 36(1-Al(e) என்ற புதிய விதிகள் புகுத்தப்பட்டதின் காரணமாக, தேசியப் பூங்கா, வனவிலங்கு சரணாலயங்கள், புலிகள் காப்பகம், யானை வழித்தடங்கள் மற்றும் காப்புக் காடுகள் போன்ற பகுதிகளிலிருந்து 1 கி.மீ சுற்றளவிற்குள் குவாரி மற்றும் சுரங்கங்கள் செயல்படவில்லை எனவும், குறிப்பாக காப்புக் காடுகளிலிருந்து 1 கி.மீ சுற்றளவிற்குள் குவாரி மற்றும் சுரங்கங்கள் செயல்பட விதிக்கப்பட்டுள்ள தடையால் டாமின் நிறுவனத்தின் 19 குவாரிகள் உள்பட பெருமளவிலான குவாரி மற்றும் சுரங்கங்கள் பாதிக்கப்பட்டுள்ளன எனவும், ஆதலால் பாதிக்கப்பட்டுள்ள குவாரி மற்றும் சுரங்க உரிமையாளர்களின், தொழிலாளர்களின் நலனைக் காத்திட மற்றும் அரசின் வருவாயைப் பெருக்கிட ஏதுவாக இவ்விதிகளில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என அறிவித்தேன். பின்னர், 16.06.2022 அன்று நடைபெற்ற மாவட்ட கனிம அலுவலர்களின் ஆய்வுக் கூட்டத்தில், தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகளில் திருத்தம் கொண்டுவர வேண்டியதன் அவசியம் குறித்தும், காப்புக் காடுகள் அமைந்துள்ள பகுதிகளின் எல்லைகளிலிருந்து 1 கி.மீ. சுற்றளவிற்குள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள கரங்க மற்றும் குவாரிகளை மீண்டும் செயல்பாட்டிற்குக் கொண்டு வருவதன்மூலம் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை பாதுகாப்பது மற்றும் அரசின் வருவாயினை அதிகரிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. அதனடிப்படையில், விதிகளில்திருத்தம் மேற்கொள்வதற்கு ஏதுவாக, கனிமவளத் துறை ஆணையரால், அரசுக்கு உரிய முன்மொழிவுகள் 23.06.2022 அன்று அனுப்பப்பட்டன.

அதனடிப்படையில், பாதிக்கப்பட்ட குவாரிகள் மற்றும் சுரங்கங்களைச் செயல்பாட்டிற்குக் கொண்டுவரவும், குத்தகைதாரர்கள் மற்றும் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாத்திடவும், அரசின் வருவாயைப் பெருக்கிடவும் தமிழ்நாடு சிறுகளிம சலுகை விதிகளில் திருத்தம் செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டு, அதன் காரணமாக, தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகளில் 14.12.2022 அன்று உரிய திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, அரசிதழிலும் வெளியிடப்பட்டது. தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள விதி 36 (1A) (e)-ன்படி, சூழலியல் உணர்திறன் பகுதி, சுற்றுப்புறம் மற்றும் சூழலியல் பாதுகாப்புப் பகுதிகளான தேசிய பூங்காக்கள், வன உயிர் சரணாலயங்கள், புலிகள் காப்பகங்கள், யானைகள் வழித்தடங்கள் ஆகியவற்றின் எல்லைகளிலிருந்து, ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல், வளம் மற்றும் காலநிலை மாறுபாடு அமைச்சகத்தால் அவ்வப்போது அறிவிக்கப்படும் பாதுகாப்பு தூரம் அல்லது அப்பகுதிகளின் எல்லைகளிலிருந்து 1 கி.மீ. சுற்றளவு, இவற்றுள் எது அதிகமோ, அப்பகுதிகளுக்குள் எந்தவித குவாரிப் பணிகளும், சுரங்கப் பணிகளும் அல்லது கல் அரவைப் பணிகளும் மேற்கொள்ளக் கூடாது.

supreme court

* விதிகளில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் திருத்தத்தின்படி தேசியப் பூங்கா, வனவிலங்கு சரணாலயங்கள், புலிகள் காப்பகம் மற்றும் யானை வழித்தடங்கள் ஆகியவற்றிலிருந்து 1 கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் குவாரிப் பணிகளுக்கான தடை தற்போதும் நீடிக்கிறது என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இது, இந்திய அரசு மற்றும் பலருக்கு எதிராக திரு. காடவர்மன் திருமால்பட் என்பவரால் தொடுக்கப்பட்ட W.P.(C) No.202 of 1995 வழக்கில், 1.A. எண்.1000 of 2003-ன் மீது மாண்பமை உச்சநீதிமன்றம் 03.06.2022 அன்று வழங்கிய தீர்ப்புக்கு ஏற்ப அமைந்துள்ளது. மேலும், பிற ஆணைகளோடு. தேசியப் பூங்கா அல்லது வனவிலங்கு சரணாலயம் போன்றவற்றின் வரையறுக்கப்பட்ட எல்லையிலிருந்து குறைந்தபட்சம் 1 கி.மீ. சுற்றளவிற்கு சுற்றுச் சூழல் உணர்திறன் மண்டலத்தினைக் கொண்டிருக்க வேண்டும் என இந்த ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
* அதோடு, ஒன்றிய அரசின் சுற்றுசூழல் மற்றம் வளத்துறையின் 09.02.2011 நாளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளில், தேசியப் பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்களில் சுரங்கப் பணிகளுக்கு அனுமதியளித்தல் கூடாது என்ற விதியினைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதையும் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
* இந்தச் சூழலில், "பாதுகாக்கப்பட்ட காடுகள்" என்பதன் பொருள், சரணாலயங்கள் மற்றும் தேசிய பூங்காக்கள் ஆகும்; அவை “காப்புக் காடுகள்" அல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 09.02.2011 நாளிட்ட ஒன்றிய அரசின் சுற்றுச் சூழல் மற்றும் வனத் துறையின் வன விலங்கு பிரிவின் வழிகாட்டி நெறிமுறைகள், தேசிய பூங்காக்கள் மற்றும் வன விலங்கு சரணாலயங்களைச் சுற்றியுள்ள சுற்றுச் சூழல் உணர்திறன் மண்டலங்களுக்கு தொடர்புடையதாக உள்ளவையே தவிர “காப்பு காடுகள்” பற்றியவை அல்ல, எனவே. 14.12.2022 நாளிட்ட விதித்திருத்தத்தின் மூலம், காப்புக்காடுகளுக்கு அருகிலுள்ள பட்டா மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் புதியதாகக் கனிமம் வெட்டியெடுப்பதற்காக குவாரி மற்றும் சுரங்கக் குத்தகை உரிமம் வழங்கும் போது, காப்புக்காடுகளின் எல்லைகளில் இருந்து 60 மீ. சுற்றளவிற்குள் எந்தவித குவாரிப்பணி அல்லது சுரங்கப்பணி மேற்கொள்ளக்கூடாது என்ற நிபந்தனையுடன் கரங்கம்/ குவாரிக்குத்தகை உரிமம் தொடர்ந்து வழங்கப்படும். ஏற்கனவே இயங்கி வந்த குவாரிகள் செயல்படலாம்.

* மேலும், மேற்படி விதித்திருத்தத்தின் மூலம் காப்புக்காடுகளின் எல்லைகளில் இருந்து 60 மீ. சுற்றளவிற்கு வெளியே அமைந்துள்ள பட்டா நிலங்களில் கல் அரவை ஈந்திரங்கள் செயல்படுவதற்கு வாய்ப்புள்ளது.
• மாண்பமை உச்சநீதிமன்றம் மற்றும் ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வளத்துறை & காலநிலை மாற்றம் அமைச்சகத்தின் 09.02.2011 நாளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் சரணாலயங்கள் மற்றும் தேசியப் பூங்காக்களுக்கு மட்டுமே இடைவெளி தேவை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி, வழிகாட்டு நெறிமுறைகளில் காப்புக் காடுகளுக்கான பாதுகாப்பு இடைவெளி பற்றிக் குறிப்பிடப்படவில்லை. எனவே, தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகள். 1959-ல் அரசு ஆணை நாள். 14.12.2022-ன் வாயிலாக காப்புக் காடுகள் என்ற சொல் நீக்கப்பட்டது சரியே. 1959 முதல் 03.11.2021 நாளிட்ட விதிதிருத்தத்திற்கு முன்பு இருந்த காப்பு காடுகளுக்கான பாதுகாப்பு இடைவெளியே தற்போதும் பின்பற்றப்படுகின்றது என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.