#BREAKING இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்
இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமியை நியமித்திருக்கிறது தமிழ்நாடு அரசு.

நாகை மாவட்டம், வேதாரண்யம் வட்டத்தை சேர்ந்த இசை கலைஞர் புஷ்பவனம் குப்புசாமிக்கு இயல், இசை, நாடக மன்றத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சிக் காலத்தில், “தகுதியானவர்களுக்கு உரிய பதவிகள் வழங்கப்படவில்லை” என்ற வேதனையை புஷ்பவனம் குப்புசாமி அவர்கள் வெளிப்படுத்தி, கண்ணீர் விட்டு அழுத சம்பவம் அனைவரும் அறிந்ததே. அதாவது தான் ஒரு கிராமத்தான், நாட்டுபுற பாடல்கள் பாடுபவன் என்பதற்காக மட்டுமே தனக்கு இசை பல்கலைக்கழக துணை வேந்தர் பதவி தரப்படவில்லை என 2018- அதிமுக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமி கண்ணீர் மல்க பேசி இருந்தார்.
இந்நிலையில் தமிழுக்காகவும், தமிழிசைக்காகவும், நாட்டுப்புறக் கலைக்காகவும் தனது வாழ்நாளையே அர்ப்பணித்த புஷ்பவனம் குப்புசாமிக்கு இன்று அவரது தகுதிக்கேற்ற பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. கர்நாடக இசையிலேயே முனைவர் பட்டம் பெற்ற இவர், மக்களிசை மாண்புகள் என்ற தலைப்பில் கர்நாடக இசையையும் மக்கள் இசையையும் ஒப்பீடு செய்து, சுரப்படுத்தியவர், கலைமாமணி விருது வாங்கியவர். அப்படிப்பட்ட தகுதி வாய்ந்த ஒரு தமிழனுக்கு அன்று மறுக்கப்பட்ட வாய்ப்பு இன்று கிடைத்திருக்கிறது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய குப்புசாமி, “தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற தலைவராக என்னை நியமித்த தமிழக அரசுக்கும் முதலமைச்சர் விஜய் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன், கிராமிய கலைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், அவர்களின் நலனுக்காகவும் தொடர்ந்து பாடுபடுவேன். இயல், இசை, நாடகம் என எந்தத் துறையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் நலிந்த கலைஞர்களுக்கு கரம் கொடுத்து அவர்களை உயர்த்துவோம், கலைஞர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்." என்றார்.

