“உங்க ஆதரவாளர்கள்கூட ஓட்டு போடமாட்டார்கள்”- செங்கோட்டையனுக்கு புகழேந்தி எச்சரிக்கை
இபிஎஸ் பக்கம் மீண்டும் நின்றால் கோபிச்செட்டிப்பாளையத்தில் உங்கள் ஆதரவாளர்கள் கூட ஓட்டு போட மாட்டார்கள் என செங்கோட்டையனுக்கு புகழேந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருக்கும் அக்கட்சியின் மூத்த தலைவர் கே.ஏ.செங்கோட்டையன், நாளை செப்டம்பர் 5-ந் தேதி மனம் திறந்து பேசப்போவதாக அறிவித்துள்ளார். அவர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பேசப் போகிறாரா?அல்லது அதிமுக ஒன்றிணைய வேண்டும் எனக் கூறுவரா? அதிமுகவில் தனி அணியை அறிவிப்பாரா? என பல்வேறு கேள்விகள் எழுந்துவருகிறது.
இந்நிலையில் திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, “எடப்பாடி பழனிசாமி தலைமையில் நீங்கள் பயணம் செய்தால், 7 முறை நீங்கள் வெற்றி பெற்ற கோபிச்செட்டிபாளையத்தில் உங்கள் ஆதரவாளர்கள்கூட ஓட்டு போடமாட்டார்கள். ஆகவே செங்கோட்டையன் நல்ல முடிவை எடுக்க வேண்டும். டிடிவி தினகரனின் விலகல் முடிவை வரவேற்கிறேன். அண்ணாமலையும் பாஜக-வை விட்டு விரைவில் வெளியே வருவார்.
அதிமுக என்ற கட்சி எங்கே இருக்கிறது? என்ற நிலைமை தற்போது வந்துவிட்டது. அதிமுக தலைவர்கள் இந்து முன்னணியின் மாநாட்டில் எல்லாம் கலந்து கொள்கின்றனர். அதிமுகவைச் சேர்ந்த ஒரு தலைவர் ஆர்.எஸ்.எஸ். கூட்டத்திலேயே கலந்து கொள்கிறார். மற்றொருவர் பாஜகவுடன் கூட்டணியை ஜெயலலிதா முறித்ததே வரலாற்றுப் பிழை என்கிறார். உங்கள் பின்னால் ஓடிவந்த எடப்பாடி பழனிசாமி இன்றைக்கு ஒரு தலைவரா? இவரை எல்லாம் ஒரு தலைவராக நீங்க ஏற்றுக் கொண்டதே அசிங்கம். இன்றைய தேதியில் திராவிட இயக்கத்தை காத்து நிற்கும் தலைவராகவே முதல்வர் மு.க.ஸ்டாலினை பார்க்கிறேன். அதற்காக உண்மையை என்னால் மறைக்க முடியாது. விஜய் வரும்போது எழுச்சி இருக்கிறது. விஜயின் வளர்ச்சியை ஏன் நாம் ஒத்துக்கொள்ளக்கூடாது?


