"ஈபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா பாஜகவின் அடிமைகளாக மாறிவிட்டனர்"- புகழேந்தி

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி நின்றால் டெபாசிட் போய்விடும், சரித்திரங்களை படைத்த இயக்கம் இந்த இடைத் தேர்தலில் நிற்க முடியாமல் நடு ரோட்டில் இருக்கிறது என புகழேந்தி கூறியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பிறந்தநாளை ஒட்டி தியாகராய நகரில் உள்ள அவரது நினைவு இல்லத்தில், அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த புகழேந்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த புகழேந்தி, “தலைவர் வளர்த்த இயக்கம் இன்றைய தினம் எந்த நிலையில் இருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி நின்றால் டெபாசிட் போய்விடும், சரித்திரங்களை படைத்த இயக்கம் இந்த இடைத் தேர்தலில் நிற்க முடியாமல் நடு ரோட்டில் இருக்கிறது. இந்த இயக்கம் காப்பாற்றபட வேண்டும், ஆட்சியில் தொடர்ந்து அமர வேண்டும் ஏழை, எளிய மக்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில் மனதார இருக்குமே ஆனால், தலைவர் பிறந்த நாள் இன்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
பழனிசாமி திருந்தி இறங்கி வர வேண்டும், ஓ.பன்னீர்செல்வம் என்ன உலக மகா தவறு செய்து விட்டார்?.. சசிகலாவும் இறங்கி வர வேண்டும், இறங்கி வாருங்கள். கட்சியை அடமானம் வைத்து விடாதீர்கள். கட்சி பொய்விடும். பாஜகவின் அடிமைகளாக மாறிவிட்டார்கள், ஆனால் அதனை வெளியில் கூறாமல் நடித்துக் கொண்டு இருக்கிறார். ஓபிஎஸ் பாஜக சொல்லை தட்டமாட்டேன் என்கின்ற நிலையில் உள்ளார். சசிகலா இப்பொழுது உள்ள அரசை மட்டும் குறைகூறுகிறார், ஆனால் மத்திய அரசை மட்டும் குறைகூற மறுக்கிறார். பாஜகவுடன் கூட்டணி கூட வைத்துக் கொள்ளுங்கள், ஆனால் இறங்கி வாருங்கள்... பாஜகவிடம் கூட்டணி வைப்பதும் வைக்காமல் இருப்பதும் உங்களைச் சார்ந்தது.ஆனால் பாஜகவை பார்த்து பயந்து அதிமுகவை அழித்து விடாதீர்கள். சீமானை தலைவர் என பாஜக ஏற்றுக் கொண்டால் தமிழகத்தில் இருக்கும் டெபாசிட்டை கூட பாஜக இழந்து விடும்” எனக் கூறினார்.