புதுக்கோட்டையில் களைகட்டிய ஜல்லிக்கட்டு- 25 காளைகளை அடக்கிய வீரருக்கு பைக் பரிசு

 
புதுக்கோட்டையில் களைகட்டிய ஜல்லிக்கட்டு- 25 காளைகளை அடக்கிய வீரருக்கு பைக் பரிசு

புதுக்கோட்டை மாவட்டம் வன்னியன் விடுதியில் நடந்த ஜல்லிக்கட்டில் சிவா என்ற வீரர் 25 காளைகளை தழுவி முதலிடம் பிடித்து பைக் பரிசாக வென்றார்.

Image

தமிழ்நாட்டிலேயே அதிக வாடிவாசலையும் அதிகப்படியான ஜல்லிக்கட்டு நடைபெறும் மாவட்டமாக புதுக்கோட்டை உள்ளது.‌ அதன்படி தமிழ்நாட்டின் இந்தாண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி கடந்த 6ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சி தொடங்கியது. 

இந்நிலையில் இன்று புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வன்னியன் விடுதியில் சித்தி விநாயகர், மாயன் பெருமாள் கோயில் பொங்கல் விழாவை முன்னிட்டு 64ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி காலை 8 மணிக்கு தொடங்கியது. இந்த ஜல்லிக்கட்டை தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதற்கு முன்னதாக புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன்  ஜல்லிக்கட்டு உறுதி மொழியை வாசிக்க வீரர்கள் அதிகாரிகள் பார்வையாளர்கள் என அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். மேலும் இந்த ஜல்லிக்கட்டில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு ஜல்லிக்கட்டை பார்வையிட்டதுடன் காளைகளுக்கும் காளையர்களுக்கும் ரோக்கப் பரிசை வழங்கினார். 

Image

இந்த ஜல்லிக்கட்டில் புதுக்கோட்டை மட்டுமல்லாமல் தஞ்சாவூர், திருச்சி, சிவகங்கை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 594 காளைகள் களம் கண்ட நிலையில் 7 சுற்றுகளாக 234 காளையர்கள் பங்கேற்று வீரத்துடன் காளைகளை தழுவினர். மேலும் இந்த ஜல்லிகட்டில்  காளைகளை தழுவும் காளையர்களுக்கும் சிறந்த முறையில் களமாடும் காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்க நாணயம், வெள்ளி நாணயம், சைக்கிள், கட்டில், நாற்காலி, பீரோல், மின்விசிறிகள், காட்பாக்ஸ், சில்வர் பாத்திரங்கள்‌ உள்ளிட்ட பரிசு பொருட்களும் ரொக்கப்பணமும் வழங்கப்பட்டது. மேலும் இந்த  ஜல்லிக்கட்டில்  சிறந்த முறையில் 25 காளைகளை தழுவி வெற்றி வாகை சூடிய திருச்சி சூரியூரை சேர்ந்த சிவா முதல் பரிசை வென்றார். அவருக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் சார்பில் பேசன் ப்ரோ இருசக்கர வாகனத்தையும் வெற்றி கோப்பையையும் பரிசாக வழங்கப்பட்டது.

Image

முதல் சுற்றில் களம் இறங்கி அதிரடியாக காளையை தழுவிய புதுக்கோட்டை காந்தி நகரை சேர்ந்த அபினேஷ் என்ற 21 வயது காளையருக்கு ஐந்தாவது சுற்றில் ஏற்பட்டு மயக்கம் அடைந்த நிலையில் ஆலங்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டும் களத்துக்கு திரும்பி அதற்கு பிறகு மூன்று காளைகள் என மொத்தம் 22 மாடுகளை தழுவி அனைவரையும் வியக்க வைத்து இரண்டாம் இடம் பெற்ற நிலையில் அவருக்கு மிதிவண்டியும் கோப்பையும் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் இந்த ஜல்லிக்கட்டில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 300 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் சுகாதார துறையினர் வருவாய் துறையினர், கால்நடைபராமரிப்புத் துறையினர்‌, தீயணைப்பு உள்ளிட்ட பல்வேறு துறையினரின் கண்காணிப்பில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. மேலும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த ஜல்லிக்கட்டை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.