துப்பாக்கித் தோட்டா பாய்ந்த சிறுவன் பலி - நிவாரணம் அறிவிப்பு!!

 
stalin

புதுக்கோட்டை மாவட்டம் பசுமலைபட்டியில் துப்பாக்கி சுடும் தளத்தில் கடந்த 30ஆம் தேதி மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் தமிழக காவல்துறையினர் துப்பாக்கிச் சுடும் பயிற்சியை மேற்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக தோட்டா ஒன்று நார்த்தாமலை கொத்தமங்கலம் பட்டியை சேர்ந்த 11 வயது சிறுவன் புகழேந்தி தலையில் பாய்ந்தது . இதனால் சிறுவன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

murder

கடந்த சில தினங்களாக மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் புகழேந்தி நேற்று மாலை உயிரிழந்தார். இதனால் கொத்தமங்கலம் திருச்சி புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் கிராம மக்கள் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.இந்நிலையில்  சிறுவன் புகழேந்தி உயிரிழந்த நிலையில் அவரது குடும்பத்திற்கு முதல்வர் முக ஸ்டாலின் நிவாரணம் வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.  இது குறித்து அவர் வெளியாகியுள்ள  செய்தி குறிப்பில் , "புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டம் நார்த்தாமலை சரகத்தில் அமைந்துள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் கடந்த 30ஆம் தேதியன்று துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற்று வந்தது.  இப்பயிற்சியின் போது நார்த்தாமலை அருகில் உள்ள கொத்தமங்கலம் பட்டி என்ற கிராமத்தில் வசித்து வந்த புகழேந்தி என்ற 11 வயது சிறுவன் வீட்டில் உணவருந்திக் கொண்டிருந்த போது,  அச்சிறுவனின் தலையின் இடது பக்கத்தில் ஒரு குண்டு பாய்ந்துள்ளது.  குண்டு பாய்ந்த சிறுவன் உடனடியாக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு ,பின்பு மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  சிறுவனின் உயிரை காப்பாற்றும் பொருட்டு  மருத்துவர்கள் அவருக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

stalin

துயர சம்பவத்தை அறிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மிகவும் வேதனையுற்று உயிரிழந்த புகழேந்தியின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டதோடு,  முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க ஆணையிட்டுள்ளார்.  மேலும் இச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் முடிவில் சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.