“அமித்ஷா, மோடிக்கு அடுத்த 4 மாதங்களுக்கு இட்லி, தோசை, சட்னி தான் பிடிக்கும்”- கார்த்தி சிதம்பரம்
அமித்ஷா, மோடி உள்ளிட்ட பாஜகவினர் அடுத்த நான்கு மாதத்திற்கு இட்லி, தோசை, சட்னி தான் பிடிக்கும். இரவில் வேட்டி கட்டி தான் தூங்குகிறோம். பாரதியார், எம்எஸ் சுப்புலட்சுமி பாட்டு தான் கேட்கிறோம். வெளிநாட்டிற்கு போகும்போது ஹெட் போனில் கூட திருக்குறள் தான் ஒலித்துக்கொண்டே இருக்கும். அவர்கள் சைவம் என்பதால் செட்டிநாட்டு உணவு பிடிக்கும் என்று சொல்ல மாட்டார்கள். இல்லையென்றால் அதையும் சொல்வார்கள் என கார்த்தி சிதம்பரம் எம்பி கிண்டலடித்துள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், “ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்பது ஒரிஜினல் தாட்டோ புதுமையான சிந்தனையோ விசித்திரமான சிந்தனையோ முதல் முறையாக உதிக்கின்ற சிந்தனையோ கிடையாது. அனைத்து அரசியல் கட்சிக்கும் தங்கள் பிரதிநிதிகள் தேர்தலில் நிக்க வேண்டும், வெற்றியடைய வேண்டும், அரசாங்கத்தில் பங்கு பெற வேண்டும் என்பது விருப்பமாக இருக்கும். இது அனைத்து அரசியல் கட்சிக்கும் எதார்த்த எதிர்பார்ப்புதான். இந்த எண்ணம் கூட இல்லை என்றால் ஏன் அரசியல் கட்சி ஆரம்பிக்க வேண்டும் ரோட்டரி சங்கங்களாக இருக்க வேண்டியது தான். காங்கிரஸ்-திமுக கூட்டணிக்குள் நெருக்கடி என்பது இல்லை, பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இது இப்போ நேத்து சேர்ந்த கூட்டணி இல்ல காலம் காலமாக இருக்கக்கூடிய கூட்டணி தான். நீண்ட நாட்களாக காங்கிரஸ் ஆட்சிக்கு வராததால் குமரல் கட்சியில் இருக்கத்தான் செய்யும் அதை அனைவரும் வெளிப்படுத்துகின்றனர்.
தவெகவுக்கு ஆதரவு இருக்கிறதுதான். ஜென்சிக்கு வாடிக்கையான அரசியல் பிடிக்காது. வாக்கே சீட்டாக மாறுமா என்பது கேள்விக்குறிதான். கட்சிக்கு ஆதரவு இருக்கிறது அந்தக் கட்சிக்கு வாக்கு வரும் வாக்கு சீட்டாக மாறுமா என்பது தெரியாது. முதலமைச்சர் வேட்பாளரை மையமாக வைத்து தான் தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் செயல்படும். மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய முதலமைச்சர் வேட்பாளரை காங்கிரஸ் முன் நிறுத்ததால் தான் காங்கிரஸால் ஆட்சிக்கு வர முடியாததற்கு காரணம். அதிகாரப்பூர்வமான பேச்சுவார்த்தை திமுகவை தவிர வேறு யாரிடமும் பேசவில்லை. பிரவீன் சக்கரவர்த்தி விஜய்யுடன் தனிப்பட்ட முறையில் பேசி இருப்பார்.
எனக்கு தற்போது நிதிநிலை பற்றி தெரியவில்லை, நான் நிச்சயம் அந்த நாற்காலியில் அமர்ந்தால் மாதம் ஆயிரத்திற்கு பதிலாக 2000 ரூபாய் ஆக கொடுப்பேன். அமித்ஷா, மோடி உள்ளிட்ட பாஜகவினர் அடுத்த நான்கு மாதத்திற்கு இட்லி, தோசை, சட்னி தான் பிடிக்கும். இரவில் வேட்டி கட்டி தான் தூங்குகிறோம். பாரதியார், எம்எஸ் சுப்புலட்சுமி பாட்டு தான் கேட்கிறோம். வெளிநாட்டிற்கு போகும்போது ஹெட் போனில் கூட திருக்குறள் தான் ஒலித்துக்கொண்டே இருக்கும். அவர்கள் சைவம் என்பதால் செட்டிநாட்டு உணவு பிடிக்கும் என்று சொல்ல மாட்டார்கள். இல்லையென்றால் அதையும் சொல்வார்கள். தமிழ்நாட்டில் முருகனை வழிபடுவதற்கோ அல்லது வேறு எந்த கடவுளை வழிபடுவதற்கோ எந்த தடையும் இல்லை” என்றார்.


