தேர்வெழுத சென்ற 10ஆம் வகுப்பு மாணவன் பேருந்திலிருந்து தவறி விழுந்து பலி
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியிலிருத்து தனியார் பேருந்தில் அரசுஉதவி பெறும் பள்ளிக்கு பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வுக்கு சென்ற 15 வயது மாணவன் பேருந்திலிருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வஊசி தெரு பகுதியைச் சேர்ந்த அழகர் என்பவரது 15 வயது மகன் புவியரசு. இவர் வேங்கடாகுளத்தில் உள்ள அரசு உதவிப் பெறும் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வரக்கூடிய நிலையில் இன்று பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுக்கான செய்முறை தேர்வு நடைபெறுவதால் மாணவன் புவியரசு காலையிலேயே பள்ளிக்கு ஆலங்குடியில் இருந்து புதுக்கோட்டைக்கு வேங்கடாகுளம் வழியாக செல்லும் தனியார் பேருந்தில் சென்றபோது ஆலங்குடி அடுத்த குப்பக்குடி வளைவில் பேருந்து திரும்பும்போது பேருந்திலிருந்து மாணவன் புவியரசு தவறி விழுந்து தலையில் படுகாயமடைந்த நிலையில் அவரை அருகே இருந்தவர்கள் மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது மாணவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து இந்த தகவல் அறிந்து மருத்துவமனைக்கு விரைந்து வந்த மாணவனின் பெற்றோர் சிறுவனின் சடலத்தை பார்த்து கதறி அழுதது பார்ப்பவர்களை கண் கலங்க செய்தது. மேலும் மாணவனின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது குறித்து ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட தனியார் பேருந்து காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்று பேருந்து ஓட்டுனரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஆலங்குடியில் இருந்து செல்லும் தனியார் பேருந்துகள் அதிவேகமாக செல்வதாகவும் இந்த வேகத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் அதேபோல் பள்ளி நேரத்தில் அரசு பேருந்துகள் அதிகளவு இயக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

