”என் தொகுதி மக்கள் முடிவே என் முடிவு”- தவெகவில் இணைகிறீர்களா? என்ற கேள்விக்கு விஜயபாஸ்கர் பதில்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு அதிமுக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி தரப்பு என இரண்டு பிரிவுகளாக பிரிந்து நேற்று ஒன்று சேர்ந்துள்ளது. இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சரும் விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் அமைச்சர் சி வி சண்முகம் ஆகியோர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்கவில்லை. இந்நிலையில் விஜயபாஸ்கர் தன்னுடைய இலுப்பூர் வீட்டில் இன்று விராலிமலை சட்டமன்ற தொகுதி மக்கள் மற்றும் தனது ஆதரவாளர்களை சந்தித்து அதிமுகவில் தொடரலாமா அல்லது தமிழக வெற்றிக் கழகத்தில் சேரலாமா என்பது குறித்து கருத்துக்களை கேட்டுள்ளார். மேலும் அரசியலில் இருந்து ஒதுங்கலாமா என்ற கருத்தையும் அவர் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பலர் தமிழக வெற்றிக் கழகத்தில் சேர வேண்டும் என்று கருத்துக்களை கூறியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசுகையில், “இன்று காலை முதல் என்னை நான்கு முறை வெற்றி பெற செய்த தொகுதி மக்களின் கருத்துக்களை கேட்டுள்ளேன். அனைத்தையும் உள்வாங்கி உள்ளேன். பலர் பல கருத்துக்களை கூறினார்கள். தொகுதி மக்களின் எண்ணம் தான் என்னுடைய எண்ணம் அவர்களின் கருத்துப்படி தான் நான் செயல்படுவேன். தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவது உள்ளிட்ட யூகங்களுக்கு நான் தற்போது பதில் சொல்ல முடியாது எனக்கு 51 வயது ஆகிறது 25 ஆண்டுகள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளேன் கொரோனா காலத்தில் என் உயிரை துச்சம் என நினைத்து மக்களுக்காக பாடுபட்டுள்ளேன் மக்களுக்காக பணியாற்றவே விரும்புகிறேன் மக்களின் முடிவு தான் எனது முடிவு என்னுடன் பயணித்தவர்கள் மற்றும் எனது கட்சி நிர்வாகிகள் என்ன சொல்கிறார்களோ அதை தான் நான் செய்தேன் தொகுதி மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். விராலிமலை தொகுதி மக்களுக்கு நன்றி உள்ளவனாக இருக்க வேண்டும் என்பதே எனது எண்ணம் அதிரடி பரபரப்பு எதுவும் இல்லாமல் நான் நிதானமாக பொறுமையாக அமைதியாக உள்ளேன்” என்றார்.
இன்றைக்கும் அதிமுகவில் தொடருகிறீர்களா என்று கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் மௌனமாக சிரித்தார். செய்தியாளர் சந்திப்பின் போது ஒரு தடவை கூட எம்ஜிஆர் வழி ஜெயலலிதா வழி என்று கூறினாரே தவிர எடப்பாடி பெயரை ஒரு தடவை கூட கூறவில்லை. நாளை சபாநாயகரை சந்திப்பீர்களா என்று கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் அதற்கும் புன்னகைத்து பதிலளிக்கவில்லை. இரு தரப்பினரும் ஒன்று சேர்ந்த பின்னர் நீங்களும் சிவி சண்முகமும் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்காமல் உள்ளீர்களே என்ற கேள்விக்கும் பதில் அளிக்காமல் மௌனமாக சிரித்தபடியே இருந்தார். தொகுதி மக்கள் மாற்றம் விரும்புகிறார்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த விஜய் பாஸ்கர் தொகுதி மக்கள் என்ன சொல்கிறார்களோ அதை தான் நான் செய்வேன் அவர்கள் மாற்றத்தை விரும்பினால் மாற்றம் இருக்கும் என்று தெரிவித்தார்.

