மோடி, அமித் ஷாவுக்கு கர்நாடக மக்கள் மரண அடி கொடுத்துள்ளனர் - நாராயணசாமி

 
Narayanasamy

கர்நாடக தேர்தல் மூலம் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோருக்கு மக்கள் மரண அடி கொடுத்துள்ளனர் என புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். 

224 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வந்தது. அம்மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் நிறைவடயவுள்ளதை முன்னிட்டு அங்கு கடந்த 10ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் என்னும் பணி நேற்று நடைபெற்றது.  அதன்படி 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 136 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதேபோல் ஆளுங்கட்சியான பாஜக 62 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி 20 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு தேவையான இடங்களுக்கும் அதிகமாக காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளதால், அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கவுள்ளது.

இது தொடர்பாக புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசமி கூறியதாவது: பிரதமர் மோடி பல்வேறு கூட்டங்களில் பேசியும், ஊர்வலம் நடத்திய நிலையிலும் கர்நாடக மாநில மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு தெளிவான வெற்றியை கொடுத்து அரியணையில் அமர்த்தியுள்ளனர். இந்த தேர்தல் வெற்றியானது, நடைபெற உள்ள மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநில தேர்தல்களுக்கு முன்னோட்டமாகும். 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மதசார்பற்ற கூட்டணி கட்சிகள் காங்கிரஸ் தலைமையில் ஆட்சியை பிடிக்கும். ராகுல்காந்தி பிரதமராக வாய்ப்பும் உருவாகி உள்ளது. கர்நாடக தேர்தல் மூலம் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோருக்கு மக்கள் மரண அடி கொடுத்துள்ளனர். இவ்வாறு கூறினார்.