கல்லூரி வளாகத்தில் மேயும் பன்றிகள், நாய்களுடன் அமர்ந்து கல்வி கற்கும் மாணவர்கள்!
புதுச்சேரி காலாப்பட்டு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பாம்பு, பன்றி, நாய்கள் வகுப்பறையில், உலாவருவதால் மாணவ- மாணவிகள் அதிர்ச்சியுடன் கல்வி கற்கின்றனர்.

புதுச்சேரியில் மிக முக்கிய அரசு கல்வி நிறுவனங்களில் ஒன்றாக புதுச்சேரி பொறியியல் கல்லூரி விளங்கியது. இக்கல்லூரி தற்போது புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால் அதன்பிறகு தான் துணைவேந்தர் நியமிக்கப்பட்டார். ஆனால் அதன்பிறகு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் தரம் சரிந்தது. குறிப்பாக தரவரிசை பட்டியலில் சிறப்பிடம் பெற்று வந்த இக்கல்வி நிறுவனம் தற்போது மிகவும் சரிவில் உள்ளது. இக்கல்லூரியில் பேராசிரியர்கள் பற்றாக்குறை தொடங்கி ஆய்வகம், கழிவறை, வகுப்பறை ஆகியவை மோசமான நிலையில் பயன்படுத்த முடியாத சூழலில் உள்ளன.
இதுபற்றி மாணவ, மாணவிகள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. பல்கலைக்கழக வளாகம் முழுக்க குப்பையால் குவிந்துள்ளன. பன்றிகள் வளாகத்தில் மேய்கின்றன. வகுப்புகள் நடக்கும் போதே நாய்கள் உலாவருகின்றன. வகுப்பறைக்குள் சர்வசாதாரணமாக நுழைந்து செல்கின்றன. அதற்கும் மேலே வகுப்பறைக்குள் சர்வசாதாரணமாக பாம்புகள் நடனமாடுகின்றன. அதற்கு மேலே பல்கலைக்கழகத்தில் லேப் மிகவும் மோசமாகவுள்ளது. நிதி ஒதுக்கியும் அதை சரிசெய்வதில்லை என்கின்றனர். பயன்படுத்தவே முடியாத சூழலில் கழிவறைகள் இருக்கின்றன. தூய்மையே செய்யாததால் மாணவிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். பல வகுப்புகளில் ஆசிரியர்கள் இல்லாததால் நாங்களே படித்து தான் தேர்வுகளை சந்திக்கிறோம். மாநில அரசின் பல்கலைக்கழகத்தை ஆளுநரும், முதல்வரும், கல்வியமைச்சரும், கல்வித்துறை உயர் அதிகாரிகளும் கண்டுகொள்வார்களா என்று கேள்வி எழுப்புகின்றனர்.


