“TVK ஒழிக.. புஸ்ஸி ஆனந்த் ஒழிக..”- பணத்தை பெற்றுக் கொண்டு வாய்ப்பு வழங்குவதாக குற்றச்சாட்டு

 
s

புதுச்சேரி தேர்தலில் சீட் தர புஸ்ஸி ஆனந்த் பணம் கேட்பதாக புகார் தெரிவித்து, வாய்ப்பு மறுக்கப்பட்டவர் தவெக அலுவலகம் முன்பு ஆதரவாளர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். புஸ்ஸி ஆனந்த் ஒழிக..... சாமிநாதன் ஒழிக.... என்று  கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.


நடிகர் விஜயின் தவெக புதுச்சேரியில் போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடபட்டது. இந்நிலையில் மணவெளி தொகுதியில் விருப்பமனு தாக்கல் செய்து தவெகவில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதாக குறிப்பிட்டு முருகன் என்ற பெருமாள் தனது ஆதரவாளர்களுடன் அலுவலகம் முன்பு அமர்ந்து கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தினார். அதைத்தொடர்ந்து முருகன் என்ற பெருமாள் கூறுகையில்,  விஜயை நம்பி வந்தேன். நம்ப வைத்து தாலியை அறுத்துவிட்டார்கள். வாய்ப்பு தருவதாக சொன்னார்கள். நான் பனையூர் சென்று தவெகவில் சேர்ந்தேன். காசு பணம் வாங்க மாட்டோம் என்றனர். எல்லா பணத்தையும் செலவு செய்தேன். தற்போது மணவெளியில் பாஜகவில் இருந்த ராமுவுக்கு தவெகவில் சீட் தந்துள்ளனர். இன்னும் அவர் உறுப்பினராகக்கூட இல்லை. 

பணத்தை வாங்கி கொண்டு புஸ்ஸி ஆனந்த், சாமிநாதன் முன்னாள் எம்எல்ஏ ஆகியோர் செயல்படுகின்றனர். இவர்கள் தளபதி விஜயை ஒழித்து விடுவார்கள். இவர்கள் மாறினால்தான் கட்சி வளரும். 30 தொகுதியில் தனித்து போட்டி என்று கூறிவிட்டு கூட்டணிக்கு ஐந்து தொகுதி என்று தெரிவித்துள்ளனர். அவர் கோடிக்கணக்கில் பணம் தருவார் உன்னால் முடியுமா என்று கேட்கிறார்கள். பணம் டீல் பேசுகிறார்கள். பணத்தை கொடுத்து தான் வேட்பாளர்கள் தேவையா? நான் சுயேட்சையாக மனு தாக்கல் செய்வேன்." என்று குறிப்பிட்டார். அதையடுத்து புஸ்ஸி ஆனந்த், சாமிநாதன் முன்னாள் எம்எல்ஏ ஆகியோரை கண்டித்து கோஷம் எழுப்பினர். இறுதியில் தவெக துண்டு, பேட்ஜ், விஜய் படங்களை அலுவலக வாயிலில் வைத்து புறப்பட்டனர்.