தேர்தல் முடிவுக்கு முன்னே ரங்கசாமிக்கு செக் வைக்கும் பாஜக! புதிதாக உருவாக்கப்படும் துணை முதல்வர் பதவி
புதுச்சேரியில் புதிதாக துணை முதல்வர் பதவியை உருவாக்கி அதற்கான கோப்பினை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தயாரித்து, டெல்லிக்கு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2021ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக- என்ஆர்காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்தது. பாரதிய ஜனதா 6 இடங்களில் வென்றது. கூட்டணி கட்சியை சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முதல்வரானார். இதனைத் தொடர்ந்து நமச்சிவாயத்துக்கு துணை முதலமைச்சர் பதவி உருவாக்கப்படலாம் எனப் பேச்சு எழுந்தது. அதை உறுதி செய்யும் வகையில் புதுச்சேரி அமைச்சரவையில் ஐந்து அமைச்சர்களுக்கு பதிலாக 6 அமைச்சர்களை நியமிப்பதற்கான அனுமதியை பெற உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநர் தரப்பில் இருந்து கோப்புகள் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் அப்போது வெளியானது. ஆனால் துணை முதல்வர் பதவிக்கு அனுமதி இல்லை என்று முதல்வர் தெரிவித்ததால் அது நடைமுறைக்கு வராமல் போனது.
இந்நிலையில் புதுச்சேரியில் என்டிஏ கூட்டணியில் மீண்டும் முதல்வர் ரங்கசாமி தொடர்வாரா என்று எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் மவுனம் காத்து வந்தார். இறுதியில் அமித்ஷா வருகை தந்து பேசிய போது தான் என்டிஏவில் இருப்பதை ரங்கசாமி உறுதி செய்தார். அதைத்தொடர்ந்து லஜகவை கூட்டணியில் சேர்ப்பது தொடங்கி பல பிரச்சினைகள் எழுந்தன. ஒருவழியாக தேர்தலை சந்தித்த போது இண்டியா கூட்டணியில் சிக்கல் ஏற்பட்டு பிளவு ஏற்பட்டது. அதே நேரத்தில் பாஜக, அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தொகுதிகளுக்கு ரங்கசாமி பிரச்சாரம் செய்யவும் செல்லவில்லை. இச்சூழலில் தேர்தலுக்கு பிறகு ரங்கசாமிக்கு எதிராக பாஜக காய் நகர்த்த தொடங்கியுள்ளது. புதுச்சேரியில் மீண்டும் துணை முதல்வர் பதவிக்காக கோப்பினை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தயாரித்து டெல்லிக்கு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் முடிவுக்கு முன்பாகவே ரங்கசாமிக்கு குடைச்சல் தர செக் வைக்க பாஜக தயாராகியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், கடந்த காலத்தில் முதல்வர் மற்றும் 5 அமைச்சர்கள் பதவி வகித்து வந்தனர். தற்போது முதல் முறையாகத் துணை முதல்வர் பதவி உருவாக்க பாஜக நடவடிக்கையை தேர்தல் முடிவுக்கு முன்பே தொடங்கியுள்ளதால் என்.ஆர். காங்கிரஸ் வட்டாரங்கள் திகைத்துள்ளன.



