மூதாட்டி பலாத்கார வழக்கில் ருசிகரம்- “என்னை யாரும் பலாத்காரம் செய்யவில்லை” என வாக்குமூலம்

 
af

புதுச்சேரியில் மூதாட்டியை பலாத்காரம் செய்ததாக தொடர்பட்ட வழக்கில், தன்னை யாரும் பலாத்காரம் செய்யவில்லை என சம்பந்தபட்ட மூதாட்டி வாக்குமூலம் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


புதுச்சேரி துய்மா வீதியில் பிரெஞ்சு குடியுரிமை பெற்ற 74 வயது மூதாட்டி வசித்து வந்தார். இந்த இடத்தில் வாணரப்பேட்டையை சேர்ந்த பிரெஞ்சு குடியுரிமை பெற்ற ராஜேந்திரன்(55) என்பவர் 2013 முதல் 2017ம் ஆண்டு வரை தங்கும் விடுதி நடத்த மூதாட்டியுடன் ஒப்பந்தம் செய்தார். ஒப்பந்தம் போட்ட பின்பு மூதாட்டி லண்டனில் உள்ள தனது மகன் வீட்டுக்கு சென்று விட்டார். அந்த இடத்தின் குத்தகை முடிந்தும், ராஜேந்திரன் இடத்தை காலி செய்யவில்லை. இதுதொடர்பாக மூதாட்டி தொடர்ந்த வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் லண்டனில் இருந்து புதுச்சேரிக்கு சமீபத்தில் அந்த மூதாட்டி வந்தார். துய்மா வீதியில் உள்ள தங்கும் விடுதியில் தனது மகளுடன் அவர் தங்கியிருந்தார். இந்த நிலையில் மூதாட்டி  அரசு மருத்துவமனைக்கு தனது மகளுடன் சிகிச்சைக்காக சென்றார். அங்கிருந்த டாக்டர்கள் உடலில் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை அளித்து விசாரித்தனர். அப்போது ஒரு கும்பல் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக மூதாட்டி தெரிவித்தார். அதிர்ச்சியடைந்த டாக்டர்கள் உடனடியாக ஒதியன்சாலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

இதுகுறித்து விசாரணை நடத்திய கிழக்கு எஸ்பி லட்சுமி சவுஜன்யா உத்தரவின்பேரில் ஓதியஞ்சாலை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், மூதாட்டியின் மகளிடம் புகார் பெற்று பாலியல் வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். வழக்கு நிலுவையில் உள்ளதால் ராஜேந்திரன் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகமடைந்து விசாரணை நடத்தினர். ஆனால் அதில் எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து போலீசார் விடுதியில் உள்ள சிசிடிவி, அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அதில் கிடைத்த வீடியோ பதிவில், சம்பவம் நடந்த நாளில் ஒரு மர்ம நபர் துய்மா வீதியில் உள்ள ஒவ்வொரு வீட்டின் கதவையும் தள்ளியும், தட்டியும் பார்த்துக்கொண்டே செல்கிறார். அப்படி விடுதியில் மூதாட்டி தங்கியிருந்த அறையை தட்டுகிறார். அப்போது கதவு திறந்துகொள்கிறது. இதன்பின் அவர் உள்ளே செல்கிறார். இந்த வீடியோ காட்சியை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். 

rape

விசாரணையில், அந்த நபர் காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த கமல்ராஜ் என்பதும், அவர் மீது புதுச்சேரி உட்பட பல்வேறு பகுதிகளில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. அவர் புதுச்சேரியில் உள்ள நகர வீதிகளில் படுத்து உறங்கி, திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கமல்ராஜை ஒதியன்சாலை காவல்நிலையம் அருகே கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தினர். விசாரணையின்போது, கதவை திறந்து உள்ளே சென்ற அவர் மூதாட்டியின் செல்போனை திருட முயற்சித்துள்ளார். இதில் சத்தம் கேட்டு விழித்த மூதாட்டி, அந்த நபரிடம் போனை பறிக்க முயன்றார். அப்போது மூதாட்டியின் முகத்தில் தலையணையை வைத்து அவர் அழுத்தியுள்ளார். அப்போது போராடியதால் மூதாட்டிக்கு காயம் ஏற்பட்டு, மயங்கி விழுந்துள்ளார். இதன்பின் செல்போனை எடுத்துக்கொண்டு கமல்ராஜ் அங்கிருந்து சென்றுவிட்டது தெரியவந்தது. தொடர்ந்து கமல்ராஜிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். 


இந்த வழக்கை முதலில் பாலியல் வழக்கு என போலீசார் பதிவு செய்துள்ளனர். அவசர கதியில் தீர விசாரிக்காமல் வழக்கு பதியப்பட்டது. இப்போது பாலியல் வழக்கு இல்லை, திருட்டு வழக்கு என போலீசார் முதல் தகவல் அறிக்கையை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதை கோர்ட்டில் நீதிபதி முன்பு சமர்பித்து வழக்கை மாற்ற வேண்டிய நிலையில் போலீசார் உள்ளனர்.