“இங்க உட்கார கூடாது... உங்க சீட்ல உட்காருங்க”- மோடி நிகழ்ச்சியில் அமைச்சருக்கு அவமதிப்பு
இருக்கை மாறி அமர்ந்த, இலாகா இல்லாத பாஜக அமைச்சர் ஜான்குமாரை ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா எச்சரித்து அனுப்பி வைத்தார்.

புதுச்சேரி, தமிழகம், கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களில் வரும் ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த 5 மாநிலங்களிலும் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். புதுவையில் நலத்திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு சென்னை வந்தார். சென்னை மக்கள் மாளிகையில் தங்கிய பிரதமர், இன்று காலை சென்னையிலிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் புதுவை லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு காலை 11.30 மணிக்கு வந்தார். அவரை மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, புதுவை கவர்னர் கைலாஷ்நாதன், முதல்அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், பாஜக மாநில தலைவர் ராமலிங்கம், புதுவை மாநில பாஜக பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனீஜெயக்குமார், திருமுருகன், ஜான்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்எல்ஏக்கள், தலைமை செயலர் சரத்சவுகான் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள், பாஜக முக்கிய நிர்வாகிகள், டிஜிபி மற்றும் அரசு அதிகாரிகள் சால்வை அணிவித்தும், மலர்க்கொத்து வழங்கியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.இதைத்தொடர்ந்து குண்டு துளைக்காத கார் மூலம் விழா நடைபெற்ற லாஸ்பேட்டை ஹெலிமேடு மைதானத்துக்கு பிரதமர் மோடி வந்தார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் நமச்சிவாயம் வரவேற்புரை ஆற்ற சென்றார். இதனால் அவரது இருக்கை காலியாக இருந்தது. உடனே பாஜக அமைச்சர் ஜான்குமார் அந்த இருக்கையில் அமர்ந்தார். உடனே ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, உங்களது சீட்டில் நீங்கள் அமருங்கள். இங்கு அமரக்கூடாது என்று எச்சரித்தார். இதையடுத்து ஜான் குமார் தனது இருக்கைக்கு பரிதாபமாக சென்றார். பிரதமர் மோடி நிகழ்ச்சிக்கு கருப்பு உடை அணிந்து வந்த ஆண்களும், பெண்களும் வெளியேற்றப்பட்டனர். ஆனால் நிகழ்ச்சி அரங்கில் அமர்ந்திருந்த அரசு துறை செயலாளர்கள் கருப்பு உடை அணிந்து இருந்தனர். சாதாரண நபர்களுக்கு ஒரு சட்டம். அரசு அதிகாரிகளுக்கு ஒரு சட்டமா? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.

