தேர்தல் நடத்தை விதிமுறைகள்- இரவு 10 மணிக்கு மதுக்கடைகளை மூட உத்தரவு
தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக புதுச்சேரியில் இரவு 10 மணிக்கு மதுக்கடைகளை மூட கலால் துறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநில சட்டமன்றத் தேர்தல் வரும் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள தெற்கு, வடக்கு, நெடுங்காடு, நிரவி, திருநள்ளாறு ஆகிய ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்புமனு பெறும் பணிகள் இன்று காலை 11.00 மணிக்குத் தொடங்கின. வேட்பாளர்கள் இன்று முதல் வரும் 23-ஆம் தேதி வரை தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யலாம் என தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்கல் செய்யப்படும் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 24-ஆம் தேதியும், மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் 26-ஆம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி, புதுச்சேரி மாநில எல்லையில் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக புதுச்சேரியில் இரவு 10 மணிக்கு மதுக்கடைகளை மூட கலால் துறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குடோன்களில் இருந்து காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே மதுபானங்களை கொண்டு செல்ல வேண்டும். புதுச்சேரியில் வழக்கமாக இரவு 11 மணி வரை மதுக்கடைகளும், 12 மணி வரை ரெஸ்ட்டோ பார்களும் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

