ஆளுநருக்கான மரியாதையை முதல்வர்கள் கொடுக்க வேண்டும்- தமிழிசை

ஆளுநருக்கு உள்ள மரியாதையை முதல்வர்கள் கொடுக்க வேண்டும், அது புதுச்சேரியில் சரியாக நடக்கிறது ஆனால் தெலுங்கானாவில் உரையாற்றவோ, கொடியேற்றவோ அனுமதிப்பதில்லை என்று புதுச்சேரி ஆளுநர் தமிழிசை குற்றஞ்சாட்டியுள்ளார்.
உத்தரகண்ட் மாநில உதய நாள் கொண்டாட்டம் புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஆளுநர் தமிழிசை தலைமை ஏற்றார். உத்தராகண்ட் மற்றும் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்களும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். உத்தராகண்ட் மாநில கலாச்சார நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் தமிழிசை, “மக்களுக்கு பாதிப்பு தரக்கூடிய எந்த தொழிற்சாலையும் புதுச்சேரியில் நடத்த முடியாது. மேலும் விபத்துக்கான காரணம், குடிநீர் மட்டும் காற்று மாசுபாடு குறித்து மருத்துவ அறிக்கை கேட்டுள்ளோம். அது வந்த பிறகு வெள்ளை அறிக்கை வெளியிடுவது குறித்து முடிவு செய்யப்படும். மேலும், ஆளுநர்களுக்கு உள்ள மரியாதையை முதலமைச்சர்கள் வழங்க வேண்டும். அதே சமயத்தில் மக்கள் திட்டங்களை நிறைவேற்றுவதில் பிரச்சனைகள் இருந்தால் ஆளுநரை சந்தித்து முதல்வர்கள் பேச வேண்டும். அது புதுச்சேரியில் ஒழுங்காக நடக்கிறது. ஆனால் தெலுங்கானாவில் ஆளுநரை சட்டசபையில் உரையாற்ற மற்றும் கொடியேற்ற அனுமதிப்பதில்லை. புரோட்டோகால் பின்பற்றுவது இல்லை. கையூட்டு பெறுவதெல்லாம் எனது வேலை அல்ல, கையெழுத்து போடுவது மட்டும் தான் எனது வேலை” என்றார்.