தமிழிசை ஆளுநராக இருக்கும்போது ரூ.3 கோடி ஊதாரித்தனமான செலவு செய்துள்ளார்- நாராயணசாமி
தமிழிசை சௌந்தர்ராஜன் புதுச்சேரியில் துணைநிலை அலுவலராக இருந்தபோது ஆளுநர் அலுவலகத்தை பாஜக அலுவலகமாகத்தான் மாற்றி கட்சிப் பணிகளை அந்த அலுவலகத்தில் அவர் மேற்கொண்டு வந்தார் என புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
புதுக்கோட்டை கீழ 7ம் வீதியில் உள்ள புவனேஸ்வரி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொள்ள வருகை தந்த புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய நாராயணசாமி, “தமிழ்நாடு அரசு சிறந்த முறையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வெள்ள பாதிப்பை தடுத்துள்ளது அதற்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன், தமிழிசை சௌந்தர்ராஜன் புதுச்சேரியில் துணைநிலை அலுவலராக இருந்தபோது ஆளுநர் அலுவலகத்தை பாஜக அலுவலகமாகத்தான் மாற்றி கட்சிப் பணிகளை அந்த அலுவலகத்தில் அவர் மேற்கொண்டு வந்தார். தற்போது அவர் 3 கோடி ரூபாய் வரை செலவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ஊதாரித்தனமான செலவு, இரண்டு ஆண்டுகளில் தனிநபருக்காக மூன்று கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டுள்ளது. இதனை சிறிய மாநிலமான புதுச்சேரியை சேர்ந்த மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதற்கு தமிழிசை சௌந்தர்ராஜன் தான் பொறுப்பேற்க வேண்டும். அமைச்சரவை முடிவில் ஆளுநர் தலையிட முடியாது என்று நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை கூறியுள்ளது. இது ஆளுநரின் தன்னிச்சையான முடிவுக்கும் சர்வாதிகாரப் போக்கிர்க்கும் அரசியல் சார்ந்து அவர்கள் நடந்து கொள்ளும் விதத்திற்கும் மாறான தீர்ப்பு, இதைத்தான் புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கிரண்பேடி இருந்தபோது அமைச்சரவை எடுக்க முடிவில் தலையிடக்கூடாது என்று தொடர்ந்து தெரிவித்து அவருடன் போராட்டமே நடத்தி வந்தோம். தற்போது நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. மேலும் இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலவிலும் உள்ளது அந்த வழக்கம் விரைவில் விசாரணைக்கு வரும்.
திமுக காங்கிரஸ் கூட்டணி சுமூகமாக உள்ளது. ஆட்சியில் பங்கு இதையெல்லாம் கட்சியின் தலைவர்கள் எடுக்க வேண்டிய முடிவு. நான் கட்சி தலைமையை சந்திக்க ஒருபோதும் நேரம் கேட்கவில்லை, புதுச்சேரியில் பார்க்க வேண்டிய கட்சி பணியே அதிக அளவு உள்ளது. வீணாக வதந்தியாக வரும் தகவலுக்கு நான் பொறுப்பு ஏற்க முடியாது. கட்சி தலைமையை தற்போது நான் சந்திக்க வேண்டிய நிலையும் இல்லை. தேர்தல் வரும் காலத்தில் தான் கூட்டணி தொகுதி பங்கீடு உள்ளிட்டவற்றிற்காக கட்சி தலைமையை சந்திக்க வேண்டிய நிலை இருக்கும், ஹரியானாவில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் 20 தொகுதிகளுக்கு மேல் மோசடி நடந்துள்ளது, ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தொடர்ந்து அந்த இயந்திரம் பயன்படுத்தப்பட்டால் மாலை நேரத்தில் அதன் ஜார்ஜ் குறைந்திருக்கும். ஆனால் அந்த தொகுதிகளில் 95 சதவீதம் சார்ஜ் இருந்தது எப்படி என்று தெரியவில்லை? அதனால் தான் வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி நடந்துள்ளது என்று தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளோம். ஆனால் தேர்தல் ஆணையம் இதற்கு மௌனமாக உள்ளது, இதற்கு பிறகு இது குறித்து நாங்கள் நீதிமன்றத்தை தான் நாட உள்ளோம், வாக்குப்பதிவு இயந்திரத்தில் இதுபோன்ற மோசடி நடக்கும் என்றுதான் வாக்குச்சீட்டை நாங்கள் தொடர்ந்து கேட்டு வருகிறோம். ஆனால் பாஜக அரசு அதற்கு மறுப்பு தெரிவித்து வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தி பல இடங்களில் வெற்றியும் அடைந்து வருகிறது. மேலை நாடுகளில் கூட வாக்குச்சீட்டு நடைமுறைதான் உள்ளது” என்று தெரிவித்தார்.