கடந்த காலங்களில் நடிகர்கள் ஆரம்பித்த கட்சிகள் என்னவானது என அனைவருக்கும் தெரியும்! விஜய்யை விமர்சித்த நாராயணசாமி
கடந்த காலங்களில் சினிமா நடிகர்கள் ஆரம்பித்த கட்சிகள் என்னவானது என எல்லோருக்கும் தெரியும் என புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து கோவில் வளாகம் முன் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, “மோடி மைனாரிட்டியோடு இருப்பதால் அவர் நினைத்ததை செய்ய முடியவில்லை. சந்திரபாபு நாயுடுவையும், நிதிஷ்குமாரையும் வைத்துக்கொண்டு இந்த ஆட்சியை மோடி நடத்திக்கொண்டுள்ளார். இந்தியா கூட்டணி பலமான எதிர்க்கட்சியாக உள்ளது. எங்கள் கொள்கைகளை தான் மோடியுடன் கூட்டணியில் இருப்பவர்கள் கூறுகிறார்கள். அதனை மோடியால் தட்ட முடியவில்லை. வக்பு வாரிய சட்டத்திருத்தம், சாதி வாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட எதையும் பாஜக கூட்டணிக்கட்சிகள் எதிர்ப்பதால் அதை நிறைவேற்ற முடியாமல் பிரதமர் தவிக்கிறார்.
சாதிவாரி கணக்கெடுப்பிற்கு பாஜக கூட்டணிக்கட்சிள் ஆதரவு தெரிவிக்கின்றன. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்பகவத் ஆதரவு தெரிவிக்கிறார். இந்தியா கூட்டணி சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த கோரியுள்ளது. ஆனால் அதனை எதிர்த்த மோடியின் பதில் இப்போது என்ன? கூட்டணி கட்சிகளின் கோரிக்கையான சாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கை, இந்தியா கூட்டணியின் கொள்கையை மோடி ஏற்றுக்கொள்வாரா என தெரியவில்லை. பிரதமர் மோடி தன்னிச்சையாக எதையும் செய்ய முடியாமல். தவிக்கிறார். மோடி நினைப்பதை நிறைவேற்ற முடியாத அளவிற்கு நெருக்கடியை கூட்டணிக்கட்சிகள் கொடுக்கிறார்கள். மோடி 5 ஆண்டு காலம் நீடிப்பாரா என மக்கள் நினைக்கிறார்கள். இதனையெல்லாம் சகித்துக்கொள்ள முடியாத மோடி ராஜினாமா செய்து கொள்ள வேண்டும்.
தமிழக ஆளுநர் ரவி தமிழக அரசுக்கும் தமிழக முதலமைச்சருக்கும் தொல்லை கொடுக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார். தமிழகத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை, குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்வதோடு, அரசுக்கு எதிராக அறிக்கை விடுகிறார். எதிர்க்கட்சி போல ஆளுநர் செயல்படுவது நல்லதல்ல. தமிழ்நாடு கல்வித்திட்டம் சரியில்லை எனக்கூறி தேசிய கல்வி கொள்கையை கொண்டு வர நினைக்கிறார். தமிழக பாடத்திட்டத்தில் படித்து தான் பல விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள், மருத்துவர்கள் உருவாகி இருக்கிறார்கள். நான் கூட தமிழ்நாடு பாடத்திட்டத்தில் புதுச்சேரியில் கல்வி கற்றவன். நாங்கள் வளர்ச்சியடையவில்லையா?, ஆட்சி செய்யவில்லையா?. உள்நோக்கத்தோடு ஆளுநர் ரவி செயல்படுகிறார். இது ஏற்புடையதல்ல.
தேர்தல் நேரத்தில் தமிழகத்திற்கு 8 முறைக்கு மேல் வந்தார் பிரதமர் மோடி. ஆனால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. காரணம் மோடி தமிழர்களின் விரோதி என்பதால். தமிழகத்திற்கு நிவாரண நிதி மறுத்தது, தமிழக மெட்ரோ மற்றும் வளர்ச்சித்திட்டங்களுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கவில்லை. கிரண்பேடியை வைத்து நான் முதல்வராக இருக்கும் போது மோடி தொல்லை கொடுத்தார். ஒருபோதும் மோடி மற்றும் பாஜகாவால் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது. புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் எக்காலத்திலும் தாமரை மலராது என பேசினார். கடந்த காலங்களில் சினிமா நடிகர்கள் ஆரம்பித்த கட்சிகள் என்னவானது என எல்லோருக்கும் தெரியும். இருப்பினும் நடிகரான விஜய் கட்சி தொடங்கியதற்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
விஜய் எந்த கட்சியுடன் கூட்டணிக்கு செல்வார் என்பது அவருக்கு தான் தெரியும்., அவரை காங்கிரஸ் கட்சிக்கு அழைக்கும் அதிகாரம் எனக்கு இல்லை. அடிப்படையில் நான் ஒரு காங்கிரஸ் கட்சியில் தொண்டன் மட்டுமே” என பேசினார்.