புதுவையில் 75,000 பேருக்கு ரூ.1000 வழங்கியதாக தமிழிசை பொய் கூறுகிறார்- நாராயணசாமி
மகளிர் உதவித்தொகை விவகாரத்தில் 75,000 பேருக்கு கொடுத்ததாக ஆளுநர் தமிழிசை உண்மைக்கு புறம்பான பொய் என புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, “கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜி-20 மாநாடு சிறப்பாக நடைபெற்றது. அதில் உலக தலைவர்கள் கலந்து கொண்டு பெருமை சேர்த்தனர். சீனா, ரஷ்யா உள்ளிட்ட பெரிய நாடுகள் இதில் கலந்து கொள்ளவில்லை. இந்திய வெளியுறவு கொள்கையில், ஒன்றிய அரசு கவிழ்ந்து விட்டதோ என தோன்றுகிறது. ஜி-20 மாநாடு பிரதமருக்கு கிடைத்த வெற்றி என பறைசாற்றுவது கண்டிக்கத்தக்கது.
எங்களது ஆட்சி காலத்தில் டெங்கு காய்ச்சல் வருவதற்கு முன்பு தனி வார்டு அமைத்து முன்னெச்சரிக்கை எடுத்தோம். அதனால் உயிர் பலிகள் ஏற்படவில்லை. ஆனால் தற்போதைய அரசின் மெத்தன போக்கால் 2 உயிர்கள் பலியாகியுள்ளன. மருந்து தெளிப்பது, பரிசோதனை செய்வது போன்ற நடவடிக்கைகளை காலம் கடந்து இப்போதுதான்செய்து வருகின்றனர். நிபா வைரஸ் என்பது மிக கொடிய நோய். கொரோனாவை விட கொடியது. எனவே நிபா வைரஸ் பரவாமல் இருக்க மாஹே நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
புதுச்சேரியில் 75,000 பேருக்கு அறிவித்தப்படி, ரூ.1000 உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாக ஆளுநர் தமிழிசை கூறுவது பொய். கடந்த மார்ச் மாதம் அறிவித்த இந்த திட்டத்தை இதுவரை நடைமுறைபடுத்தவில்லை. அறிவித்த போது 10,000 பேருக்கு மட்டுமே கொடுக்கப்பட்டது. வேறு யாருக்கும் கொடுக்கப்படவில்லை. 75,000 பேருக்கு கொடுத்ததாக ஆளுநர் கூறுவது உண்மைக்கு புறம்பானது. அவர் கூறியது பொய் என்று நிரூபிக்கப்பட்டால் புதுச்சேரி ஆளுநர் மற்றும் தெலுங்கானா ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்ய தமிழிசை தயாரா? பாஜகவினர் பொய் கூறுவதில் கைதேர்ந்தவர்கள். அதில் தமிழிசையும் ஒருவர். பாராளுமன்ற தேர்தலில் நிற்பதற்காக இது போன்ற சர்ச்சைக்குரிய வகையில் பேசி மக்கள் மத்தியில் இடம்பிடிக்க ஆளுநர் தமிழிசை முயற்சி செய்துவருகிறார். தேர்தலில் நின்றால் அவர் போனியாக மாட்டார். ஏற்கனவே அவர் தேர்தலில் நின்று டெபாசிட் வாங்காதவர். பாராளுமன்ற தேர்தலோடு என்.ஆர்.காங்கிரஸ், பாஜக ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும்” என்றார்.