இந்தியா என்றாலே மோடிக்கு பயம், குளிர் காய்ச்சல்- நாராயணசாமி

 
புதுச்சேரியில் நாளை முதல் அனைத்துக் கடைகளும் திறக்கப்படும்- முதலமைச்சர் நாராயணசாமி

ஆளுநர் தமிழிசை ஏற்கனவே தமிழகத்தில் பாஜகவின் தலைவராக இருந்தார், இப்போது தெலங்கானா ஆளுநர், புதுச்சேரி துணை நிலை ஆளுநராக உள்ளார். அவர் பாஜகவின் துண்டுபோடாத துணைநிலை ஆளுநர். அவர் துண்டுபோட்டால் ராஜ்நிவாஸை பாஜக அலுவலகமாக மாற்றிவிடுவார் என்று புதுச்சேரி காங்கிரஸ் கட்சி பாதயாத்திரையின் போது முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் நடத்திய இந்திய ஒற்றுமை யாத்திரையின் ஓராண்டு நிறைவையொட்டி, புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று பாதயாத்திரை நடைபெற்றது. இதற்கு மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் எம்பி தலைமை தாங்கினார். முன்னாள் முதல்வர் நாராயணசாமி, முன்னாள் சட்டப்பேரவை துணைத் தலைவர் பாலன் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர். காமராஜர் சாலையில் உள்ள பெரியார் சிலை அருகே தொடங்கிய பாதயாத்திரை நேரு வீதி, மிஷன் வீதி வழியாக ஜென்மராக்கினி மாதா கோயில் அருகில் நிறைவடைந்தது.

பாதயாத்திரைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, “ராகுல்காந்தி தன்னுடைய நடைபயணத்தில் இந்திய நாட்டு மக்களை புரிந்து கொண்டார். காந்திக்கு பிறகு பாதயாத்திரை செய்து மக்களை புரிந்து கொண்டவர் ராகுல் காந்தி. இண்டியா கூட்டணி ஆரம்பித்து பாட்னா, பெங்களூர், மும்பையில் கூட்டங்கள் சிறப்பாக நடைபெற்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 28 அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்துள்ளன. இந்தியாவில் காங்கிரஸ் கட்சி தான் பெரிய கட்சி. காங்கிரஸ் கட்சியால்தான் அதிக இடங்களை பெற முடியும்.

அதிக இடங்களை பெற்றால் கண்டிப்பாக காங்கிரஸ் தலைமையில் தான் மத்தியில் ஆட்சி அமையும். நாட்டின் பிரதமராக 2024-ல் ராகுல் காந்தி வருவார். அதில் எந்தவித மாற்றுக்கருத்தும் யாருக்கும் கிடையாது. ஆனால் நரேந்திர மோடிக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. இண்டியா கூட்டணி ஆரம்பித்த உடனேயே மோடி உலர ஆரம்பித்துவிட்டார். இந்தியாவின் பெயரை பாரத் என்று கூறியுள்ளார். இந்தியா என்றாலே மோடிக்கு பயம் வந்துவிடுகிறது. குளிர் காய்ச்சல் வந்துவிடுகிறது. ஆனால் நாட்டின் மக்கள் இப்போது தெளிவாக இருக்கிறார்கள்.

புதுச்சேரியின் கலாச்சாரத்தையே ரங்கசாமி அழித்து வருகிறார் - நாராயணசாமி  குற்றச்சாட்டு..

புதுச்சேரியில் குடும்பத் தலைவிக்கு ரூ.1000, பிறந்த குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் டெபாசிட், சிலிண்டருக்கு ரூ.300 ஆகிய மூன்று திட்டங்கள் தொடங்கப்பட்டன. ஆனால் அந்த திட்டங்கள் நடைபெறவில்லை. அதற்கான நிதியும் இல்லை. புதுச்சேரியை பொருத்தவரையில் மக்கள் நலப் பிரச்சனைகளில் கவனம் செலுத்துவதில்லை. பேனர் கலாச்சாரத்தால் இரண்டு அப்பாவி உயர்கள் போயிலுள்ளன. இதற்கு யார் பொறுப்பு. ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பதில் சொல்வார்களா? ஆட்சியாளர்கள் பதில் சொல்லியாக வேண்டும். பேனர் தடை சட்டம் நடைமுறையில் உள்ளது. நீதிமன்றம் தீர்ப்பு இருக்கிறது. அதையும் மீறி முதல்வர், அமைச்சர்களுக்கு பேனர் வைக்கப்படுகிறது. பாஜகவினரும் வைக்கின்றனர். விளம்பரத்தை தவிர வேறு ஒன்றையும் இந்த ஆட்சியில் இருப்பவர்கள் செய்யவில்லை.

முதல்வர் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. அவருடைய கல்லாபெட்டி நிரம்ப வேண்டும். பணம் வந்தால் போதும். முதல்வர், அமைச்சர்கள் கொள்ளை கும்பலைச் சேர்ந்தவர்கள். அதற்கு சட்டப்பேரவைத் தலைவர் கூட்டணியாக உள்ளார். ஆளுநர் தமிழிசை ஏற்கனவே தமிழகத்தில் பாஜகவின் தலைவராக இருந்தார். இப்போது தெலங்கானா ஆளுநர், புதுச்சேரி துணை நிலை ஆளுநராக உள்ளார். அவர் பாஜகவின் துண்டுபோடாத துணைநிலை ஆளுநர். அவர் துண்டுபோட்டால் ராஜ்நிவாஸை பாஜக அலுவலகமாக மாற்றிவிடுவார்.

இதுபோன்ற கூட்டம் புதுச்சேரியில் ஆட்சி செய்கிறது. இது தூக்கி எறியப்பட வேண்டும். 2024-ல் நரேந்திரமோடி தூக்கி எறியப்பட வேண்டும். காங்கிரஸ் தலைமையில் மத்தியில் ஆட்சி வரவேண்டும். ராகுல் காந்தியின் கனவை நினைவாக்க, சோனியா காந்தியின் கரத்தை பலப்படுத்த புதுச்சேரியில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பனர் வெற்றி பெற்று வரவேண்டும். அதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து பாடுட வேண்டும். கருத்துவேறுபாடுகளை நீக்கிவிட்டு ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். புதுச்சேரியில் காமாட்சியம்மன் கோயில் நிலம் மட்டுமின்றி, பல இடங்களில் கோயில் நிலம் அபகரிக்கப்பட்டுள்ளது. அந்த எல்லா நிலங்களும் கையகப்படுத்தப்பட வேண்டும். காமாட்சியம்மன் கோயில் நிலத்தின் பத்திரத்தை ரத்து செய்யும் வரை நாம் ஓயக்கூடாது” என்றார்.