"ஆட்சியில் பங்கு தருவதற்கு எதிர்க்கட்சியாககூட இருந்துவிடுவேன் என பழனிசாமி கூறினார்"- கிருஷ்ணசாமி
ஆட்சியில் பங்கு தருவதற்கு எதிர்க்கட்சியாககூட இருந்துவிடுவேன் என்றார் பழனிசாமி என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு கிருஷ்ணசாமி அளித்த பேட்டியில், “ஆட்சியில் பங்கு தர பழனிசாமிக்கு மனமில்லை. அதிகார பங்கீடு செய்துகொள்ள இபிஎஸ் விரும்பவில்லை. அதிமுக கூட்டணியில் எண்ணிக்கையை குறைத்துக்கொண்டு ஒரு அமைச்சர் பதவி கேட்டோம். ஆட்சியில் பங்கு தருவதற்கு எதிர்க்கட்சியாககூட இருந்துவிடுவேன் என்றார் பழனிசாமி... திமுகவுக்கு மாற்று அதிமுகதான் என்ற கருத்துருவாக்கத்தை செய்ய பழனிசாமி தவறிவிட்டார். ஆனால் திமுக தீயசக்தி, தான்தான் தூயசக்தி என விஜய் கருத்துருவாக்கம் செய்தார். அண்ணா, எம்ஜிஆர் என்று பெயரை சொல்வதை தவிர எந்த செயல்திட்டமும் விஜய்யிடம் இல்லை. திமுகவை எதற்காக வீழ்த்த வேண்டும் என்பதற்கு பழனிசாமி சரியான காரணத்தை சொல்லவில்லை. விஜய்யின் பலவீனத்தையும் அவர் சொல்லியிருக்க வேண்டும்.
பாஜக பெற்ற 28 தொகுதிகளும் அதிமுக வெல்ல வாய்ப்பில்லாத தொகுதிகள். விஜய் ஆட்சிக்கு வந்ததற்கு பாஜகவே முழு பொறுப்பேற்க வேண்டும். தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பாஜகவிடம் எந்த செயல்திட்டமும் இல்லை. விஜய் அதிமுகவை பெரும் அலவில் ஊழல்வாதிகள் என்று விமர்சித்தார். இப்போது அவர்கள்தான் அந்த கட்சிக்கு அதிகளவில் இழுக்கப்படுகிறார்கள். வெற்றி பெற்று ஒரு மாதம் கூட ஆகாமல் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும்? இதற்கு விடை தெரியாமல் தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் நடத்தக்கூடாது” என்றார்.

