பொதுக்கூட்டம், ரோடு ஷோ - வழிகாட்டுதல் வெளியீடு

 
s s

அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்கள், பேரணி மற்றும் பிரச்சாரம் நடத்துவதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு அரசாணையாக வெளியிட்டுள்ளது.

Road Show Guidelines: ரோட் ஷோ நிபந்தனைகள், முன்பணம் எவ்வளவு.? ஜன.5 ஆம் தேதி  வழிகாட்டு நெறிமுறை வெளியீடு | Madras High Court orders publication of  guidelines for road show and public ...

தவெக தலைவர் விஜய்யின் கரூர் மக்கள் சந்திப்பின் போது ஏற்பட்ட துயரத்தின் தொடர்ச்சியாக அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்களுக்கு விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கின் விசாரணையில் பிறப்பித்த உத்தரவின் படி தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை கலந்து ஆலோசித்து விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு தற்போது அரசாணையாக வெளியிட்டுள்ளது. அதில் பொதுக்கூட்டங்கள், பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்களில் அரசியல் கட்சிகள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.  

5 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கலந்து கொள்ளும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகள், ரோடு ஷோ, பேரணிகள் ஊர்வலங்கள் ஆகியவற்றுக்கு இந்த விதிமுறைகள் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி கூட்டம் நடத்த அனுமதி கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அதற்குரிய படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். அதில், நிகழ்ச்சி தொடங்கும் தேதி, இடம், நேரம் ஆகியவற்றோடு நிகழ்ச்சியின் நோக்கம் குறித்தும் தெரிவிக்க வேண்டும். மேலும், எதிர்பார்க்கப்படும் அதிகபட்ச கூட்டம், கலந்துகொள்ளும் சிறப்பு விருந்தினர்கள், பேச்சாளர்களின் எண்ணிக்கையை குறிப்பிட வேண்டும். அறிவிக்கப்பட்ட இடங்களில் நடத்த 10 முதல் 21 நாட்களுக்கு முன்னதாகவும், மாற்று இடங்களில் 15 முதல் 30 நாட்களுக்கு முன்னதாகவும், 50 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கூடும் மாநாட்டிற்கு 30 நாட்களுக்கு முன்பு அனுமதி பெற வேண்டும்.

ஒரு இடத்தில் ஒரே தேதியில் பல விண்ணப்பங்கள் வந்தால் முதலில் வருபவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு கூடுதல் முன்னுரிமை அளிக்கப்படும். எதிர்பார்க்கப்படும் கூட்டத்திற்கு ஏற்ப ஏற்பாடு செய்வதோடு, பங்கேற்பாளர்கள் நூறு பேருக்கு ஒரு தன்னார்வலர் நியமிக்கப்பட வேண்டும். 50 வாகனங்களுக்கு ஒரு தன்னார்வலர் நியமிக்கப்பட வேண்டும். கூட்டத்தில் பங்கேற்பாளர்களுக்கு குடிநீர், உணவு, நடமாடும் கழிப்பறைகள் ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டும். 50 பேருக்கு ஒரு கழிவறை, 100 மீட்டருக்கு ஒரு குடிநீர் மையம் அமைக்கப்பட வேண்டும். கர்ப்பிணிகள் முதியவர்கள் குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை கவனிக்க தனியாக தன்னார்வலர்களை நியமிக்க வேண்டும். நிகழ்ச்சி முடிந்த பின்பு கூட்டம் பாதுகாப்பான முறையில் கலைந்து செல்வதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். ஊர்வலம் நடத்தினால் சாலையின் அரைப்பகுதி மட்டுமே பயன்படுத்த வேண்டும். சாலை நிகழ்ச்சிகளை 3 மணி நேரத்திற்குள் முடிக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட நேரம் மற்றும் வழித்தடத்தை மாற்றக் கூடாது. அவசரத் தயார் நிலை, மருத்துவ மீட்பு, தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

சட்டம் ஒழுங்கை பேணிக்காத்து தேவையற்ற மற்றும் விரும்பத்தகாத சம்பவங்கள் அரங்கேறுவதை தடுக்க வேண்டும். வருவாய்த்துறை நிகழ்வை முழுமையாக கண்காணிபதோடு, காவல்துறை, மருத்துவத்துறை, பொதுப்பணித்துறை, மின்சாரத்துறை என அந்தந்த துறை அதிகாரிகள் அந்தந்த பணிகளை கண்காணிக்க வேண்டும்.நிகழ்வு நடைபெற்ற பின்பு பாதுகாப்பு கண்காணிப்புக் குழு நிகழ்வு நடைபெற்ற இடத்தில் ஆய்வு செய்ய வேண்டும். குறைந்த அபாயம் உள்ள பகுதியில் 200 பேருக்கு ஒரு காவலர் மிதமான அபாயம் உள்ள பகுதியில் நூறு பேருக்கு ஒரு காவலர் அதிக அபாயம் உள்ள பகுதியில் 50 பேருக்கு ஒரு காவலர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும். நிகழ்வுக்கான விதிக்கப்பட்ட விதிமுறைகளை பின்பற்றியது தொடர்பாகவும், அங்கு ஏற்பட்ட சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் தொடர்பாகவும் அறிக்கை வழங்க வேண்டும். நிகழ்வுக்கு பின் தாக்கல் செய்யப்படும் அறிக்கையில் குறைபாடுகள் இருப்பின் பொதுச்சொத்து சேதம் மற்றும் இழப்பு தடுப்பு விதிகளின் கீழ் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கலாம். சொத்து சேதம் ஏற்பட்டால் சட்டத்தின்படி இழப்பீடு வசூல் செய்ய வேண்டும்.குற்ற வழக்குகளை தனியாக தொடரலாம். ஜனநாயக உரிமையை பாதுகாக்கவும், பொது பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கை முதன்மைப்படுத்தும் வகையில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், மிக முக்கியமான சூழ்நிலைக்கு ஏற்ப மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை முடிவு எடுக்க தனி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவ்வப்போது இந்த நெறிமுறைகள் மறுபரிசலினை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.