இஸ்ரோவின் புதிய மைல்கல்! விண்ணில் பாய்ந்த PSLV-C60 ராக்கெட்டில் ஸ்பேடக்ஸ் செயற்கைக்கோள்கள்

 
ச்

இஸ்ரோவின் விண்வெளி ஆய்வின் அடுத்த மைல்கல்லாக டாக்கிங் சிஸ்டம் சோதனை செய்வதற்கான ஸ்பேடக்ஸ் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நேற்று விண்ணில் ஏவப்பட்டது. 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ  ஸ்பேடக்ஸ் என்கிற முக்கியத்துவம் வாய்ந்த சோதனை திட்டத்திற்கான செயற்கைக்கோளை நேற்று விண்ணில் ஏவியுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி -சி60 ராக்கெட்  மூலம் ஸ்பேடக்ஸ் என்கிற பெயரில் தலா 220 கிலோ எடைகொண்ட இரண்டு செயற்கைக்கோள்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த இரண்டு செயற்கைக்கோள்களும் விண்வெளியில் இணைந்து(டாக்கிங்), தரவு பரிமாற்றம் செய்து மீண்டும் பிரிக்கப்படவுள்ளது.  டாக்கிங் என்பது விண்வெளியில் இருக்கும் இரண்டு விண்கலன்களை இணைப்பது மட்டும் இல்லாமல் அந்த இணைக்கப்பட்ட இரண்டு விண்கலன்களுக்கு இடையே ஆற்றல் பரிமாற்றம்,டேட்டா பரிமாற்றம் ஆகியவற்றை செய்வது ஆகும். ஆனால் அதனை புவி ஈர்ப்பு விசை மற்றும் வளிமண்டலம் இல்லாத விண்வெளியில் மணிக்கு குறைந்தது 28000 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும்போது  இந்த சவாலான பணி மேற்கொள்ளப்படவுள்ளது. 


இதற்காக ஸ்பேடக்ஸ் செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி-சி60 ராக்கெட் மூலம் நேற்று இரவு 10 மணி 5 வினாடியில் விண்ணில் செலுத்தப்பட்டது. ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்ட  912 வது வினாடியில் ஸ்பேடக்ஸ் -பி செய்ற்கைக்கோளும், 918வது வினாடியில் ஸ்பேடக்ஸ்-ஏ செயற்கைக்கோளும் 476 கி.மீ உயரத்தில் அதனதன் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இதனை கட்டுப்பாட்டு அறையிலிருந்த விஞ்ஞானிகள் கைதட்டி வாழ்த்து தெரிவித்தனர்.