தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் தொடரும்: சி.ஜே.பி நிறுவனரின் அதிரடி அறிவிப்பு!

 
Q

நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி,

டில்லி ஜந்தர் மந்தரில் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் போராட்டத்தை துவக்கினார். 21 நாள் போராட்டத்தை எட்டிய போது, அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு, வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கும் அவர் போராட்டத்தை தொடர்ந்தார்.

இதனிடையே, உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்துமாறு மத்திய அமைச்சர்கள் தொடர்ந்து பேச்சுவார்ததை நடத்தி வந்தனர். நீட் வினத்தாள் கசிவு விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அளிக்கப்பட்ட உத்தரவாதத்தின் பேரில், நேற்று இரவு பழச்சாறு குடித்து அவர் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை நிறைவு செய்தார்.

இந்த நிலையில், சோனம் வாங்சுக் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றுக் கொண்டாலும், டில்லியில் போராட்டம் தொடரும் என்று சிஜேபி இயக்கத்தின் நிறுவனர் அபிஜித் தீப்கே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில்; கடந்த 26 நாட்களாக சோனம் வாங்சுக் நடத்தி வந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நிறைவு செய்தது பெரும் நிம்மதி அளிக்கிறது. உங்களின் அசாதாரணமான தைரியத்திற்கும், தியாகத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

உயிரைப் பணயம் வைத்து நாட்டில் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளீர்கள். உங்களின் உயிர் மிகவும் விலைமதிப்பற்றது. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரையில், ஜந்தர் மந்தரில் எங்களின் அமைதியான போராட்டம் தொடரும், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.