பாஜக, ஆர்எஸ்எஸ்-இன் மறைமுக ஆதரவாளரான சீமானை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

 
போராட்டம்

அருந்ததியர் சமூகத்தினரை பற்றி சீமான் அவதூறாக பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்புலிகள் கட்சியினர் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அக்கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். 

வேட்பாளர் மேனகா

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன், “ தூய்மை பணி செய்வதற்காக தமிழகத்திற்கு அருந்ததியர்கள் வந்தார்கள் என்ற பொய்யான சாதிவெறி கருத்துகளை தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து பரப்பி வருகின்றார். அண்மையில் ஈரோடு கிழக்கு இடைதேர்தல் பரப்புரையில் அருந்ததியர் சமூக மக்களை இழிவாக பேசியதாக சீமான் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை தமிழக அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும். 

திராவிட சிந்தாந்தத்தை நேரடியாக எதிர்க்க  திராணியில்லாத பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் கும்பலின் மறைமுக ஆதரவாளர் தான் இந்த சீமான். சீமானை வைத்து தமிழகத்தின் ஒற்றுமையை சீர்குலைக்க பா.ஜ.க மற்றும் ஆர் எஸ் எஸ் கும்பல்கள் நினைக்கிறது. பா.ஜ.கவின் கைக்கூலியாக செயல்படும் சீமான் தொடர்ந்து இது போன்ற நச்சு கருத்துகளை பரப்பினால் தமிழ் புலிகள் கட்சி வேறு விதமான போராட்டங்களை முன்னெடுக்கும் சீமான் பேசுவது தமிழ் தேசியம் அல்ல,  அவர் வலது சாரி ஆதரவு தமிழ் தேசிய அரசியல் செய்கிறார். ஈரோடு இடைத்தேர்தலில் சரிவை சந்தித்துள்ள சீமான் தன் சாதிவெறி பேச்சுகளை நிறுத்தி கொள்ளாவிட்டால், தமிழக அரசியலில் இருந்து விரைவில் ஓரங்கட்டப்படுவார்” எனக் கூறினார்.