"இந்தி பேசாத மாநில மக்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழி பறிக்கப்படுகிறது" - செல்வப்பெருந்தகை கண்டனம்

 
selvaperunthagai

இந்திய ஆட்சி மொழிகள் சட்ட திருத்தத்தின்படியும் இந்தி பேசாத மாநில மக்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழி பறிக்கப்படுவதையும் எதிர்த்து கடுமையான போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும்  என்று செல்வப்பெருந்தகை  தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவோம் என வாக்குறுதி வழங்கி 10 ஆண்டு ஆட்சியை பிரதமர் மோடி நிறைவு செய்ய இருக்கிறார். ஆனால், கொடுத்த வாக்குறுதியின்படி 20 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கியிருக்க வேண்டும். 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. 2012 ஆம் ஆண்டு வேலையின்மை 1 கோடியாக இருந்தது. 2022 ஆம் ஆண்டில் வேலையின்மை 4 கோடியாக அதிகரித்துள்ளது. இளநிலை மற்றும் முதுநிலை பட்டதாரிகளில் 33 சதவிகிதம் பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள். வேலையில்லாத் திண்டாட்டத்தால் பொறியியல் பட்டதாரிகள் தினக்கூலிகளாக பணியாற்றுகிறார்கள். பி.எச்.டி. படித்தவர்கள் ரயில்வே துறையில் பியூன் வேலைக்கு விண்ணப்பிக்கிறார்கள். இந்நிலையில், ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வாணையம் உச்சநீதிமன்றத்தின் ஒரு தீர்ப்பை சாக்காக வைத்துக் கொண்டு மண்டல வாரியான தேர்வு முறையை ஒழித்துக்கட்டியுள்ளது. இதன் விளைவாக தேர்வுகள் அனைத்தும் தலைநகர் தில்லியில் நடத்துகிற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தேர்வின் மூலமாக 90 சதவிகிதத்திற்கும் மேலாக இந்தி பேசும் மாநிலங்களிலிருந்தே பணி நியமனங்கள் நடைபெறுகிறது. தென்மாநிலங்களில் இருந்து பெயரளவுக்கு 5 அல்லது 10 சதவிகிதத்தினர் மட்டுமே நியமிக்கப்படுகின்றனர்.

selva perunthagai

ஒன்றிய பா.ஜ.க. அரசின் இத்தகைய தவறான அணுகுமுறையின் காரணமாக, பணியாளர் தேர்வாணையத்தினால் மத்திய அரசின் அலுவலகங்களின் தன்மையே முற்றிலும் மாறியிருக்கிறது. உதாரணமாக, சி.ஏ.ஜி. தலைமையிலான கணக்கு தணிக்கை அலுவலகத்தை எடுத்துக் கொண்டால் அந்த அலுவலகங்களில் அரசமைப்புச் சட்டம் விதித்துள்ள பணியே கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. தணிக்கை அலுவலகத்தின் பணி என்னவென்றால், தமிழ்நாடு முழுவதும் சென்று மாநில அரசு அலுவலகங்களில் தணிக்கை செய்து அறிக்கையை ஆளுநர் மூலமாக சட்டசபையில் சமர்ப்பிப்பதாகும். இவ்வாறு வேலையில் சேர்ந்த மற்ற மாநில பணியாளர்கள் மாநில மொழியில் ஒரு தேர்வு எழுத வேண்டுமென்று ஒரு விதி இருந்தாலும் அதுவொன்றும் தணிக்கை செய்யும் அளவிற்கு  ஆழமான அறிவை கொடுத்து விடாது என்பது தெளிவு. அதிலேயே மாநில கணக்காயர் கட்டுப்பாட்டில் மண்டல கணக்காயர் என்று ஒரு பிரிவு உண்டு. அவர்கள் மாநில அரசின் பொதுத்துறை பிரிவுகளில்  அமர்த்தப்படுவார்கள். அவர்கள் ஒவ்வொரு கணக்கையும் ஆய்வு செய்து கையெழுத்திட்டால் தான் அது ஏற்கப்படும். இந்த பதவிகளில் சரிபாதிக்கு மேல் இந்தி பேசும் மாநில ஊழியர்கள் தான் அமர்த்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் பணியாற்றும் இந்தி பேசும் பணியாளர்கள் தமிழே தெரியாமல் எப்படி கணக்கு தணிக்கையை ஆய்வு செய்ய முடியம் ? மேலும், இவ்வாறு பணியில் அமர்பவர்களுக்கு மொழி, கலாச்சாரம், பருவநிலை என பல சிக்கல்கள் இருப்பதால் இங்கு குடியேற சிரமப்படுவதோடு, பணியில் சேருபவர்களில் பெரும்பாலானோர் அடுத்தடுத்து தேர்வுகளை எழுதி தமது மாநிலங்களுக்கு திரும்பி சென்று விடுகின்றனர். ஆனால், முன்பு போல மண்டல வாரியான தேர்வுகள் நடத்தப்பட்டு அந்தந்த மாநிலங்களுக்கு உரிமையான இடங்களில் அந்தந்த மாநில மக்கள் நியமிக்கப்பட்டால் மட்டுமே பணியும் சிறப்பாக நடைபெறும். அவர்களும் விருப்பமுடன் பணியில் தொடர்வதற்கு வாய்ப்பு ஏற்படும். அதன்மூலம் மாநிலத்தின் உரிமையும் காப்பாற்றப்படும்.

selvaperunthagai

பணியாளர் தேர்வாணைய தேர்வுகள் தற்போது இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டுமே நடைபெறுகிறது. பழைய முறைப்படி மண்டல வாரியாக சென்னை போன்ற நகரங்களில் தேர்வு நடத்தப்பட்டு அதன்படி பணியாளர்களை நியமனம் செய்தால் மட்டுமே அந்தந்த மாநிலங்களைச் சார்ந்தவர்கள் அந்தந்த மாநிலங்களில் பணியாற்றுவதற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். அதற்கு மாறாக, இந்தி மொழியில் தேர்வு எழுதி தேர்வு பெற்றவர்கள் தமிழகம் போன்ற மாநிலங்களில் பணியில் அமர்த்தப்பட்டால் நிர்வாகச் சிக்கல் தான் ஏற்படும் என்பதை ஒன்றிய பா.ஜ.க. அரசு உணர வேண்டும். 

சமீபத்தில், பணியாளர் தேர்வாணையத்தில் ஜூன் 2024 முதல் ஜூலைக்குள் 41,233 காலிப் பணியிடங்களுக்கு இணையதளத்தின் மூலம் தேர்வு நடத்த அறிவிப்பு வெளியிடப் பட்டிருக்கிறது. இந்த தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தோடு பிற மாநில மொழிகளில் ஒன்றான தமிழிலும் நடத்தப்பட வேண்டுமென்று வலியுறுத்த விரும்புகிறோம். 

இந்த கோரிக்கையை ஏற்பதன் மூலம், மத்திய அரசு அலுவலகங்களில் அந்தந்த மாநில மொழி தெரிந்தவர்களே பணியில் நியமிக்கப்படக் கூடிய வாய்ப்பு ஏற்படும். அப்படி நியமிக்கப்பட்டால் தான் ஒன்றிய அரசின் நிர்வாகம் சிறப்பாக நடைபெறும். இந்த கோரிக்கை ஏற்கப்படவில்லையெனில், பண்டித நேரு அவர்களின் உறுதிமொழியின்படியும், இந்திய ஆட்சி மொழிகள் சட்ட திருத்தத்தின்படியும் இந்தி பேசாத மாநிலமாநில மக்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழி பறிக்கப்படுவதையும் எதிர்த்து கடுமையான போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.