தென்காசி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல்

சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவன் 308-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் இன்று மாலை 6 மணி முதல் செப்.2-ம் தேதி காலை 10 மணி வரை 144 தடை உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்திய விடுதலை வரலாற்றில் 'வெள்ளையனே வெளியேறு' என்று சுதந்திரத்திற்காக முதன்முதலில் முழக்கமிட்ட போராட்ட மாவீரரும், வீர உணர்ச்சியும், இறை உணர்வும் மிகுந்தவருமான மாமன்னர் பூலித்தேவனின் 308-ஆவது பிறந்த நாள் நாளை மறுநாள் (1.9.2023 ) வெள்ளிக் கிழமை காலை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, பூலித்தேவனின் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்த தென்காசி மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் மற்றும் சமுதாய அமைப்புகளை சேர்ந்தவர்கள் வந்து கலந்து கொள்வார்கள்.
இதனால் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க தென்காசி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 2ம் தேதி காலை 10 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது, மாவட்டத்துக்குள் வாள், கத்தி, லத்தி, கற்கள் போன்ற ஆட்சேபனைக்குரிய பொருட்களுடன் வரும் வாகனங்கள் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளது.