இங்கெல்லாம் விநாயகர் சிலைகளைக் கரைக்கத் தடை!
தமிழ்நாட்டிலுள்ள ராம்சர் அங்கீகாரம் பெற்ற நீர்நிலைகள், சதுப்புநிலங்கள் மற்றும் பழவேற்காடு ஏரியில் விநாயகர் சிலைகளைக் கரைக்கத் தடை விதித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் உத்தரவிட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி விழா செப்.7-ம்தேதி கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியையொட்டி பொதுமக்கள் வீடுகள் மற்றும் தெருக்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபடுவார்கள். இதையடுத்து அந்த சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பார்கள். இந்நிலையில் விநாயகர் சிலையை கரைப்பதற்கான இடங்கள் குறித்த தகவல்களை அனைத்து மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்களுக்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
இதன்படி, தமிழ்நாட்டிலுள்ள 18 ராம்சர் அங்கீகாரம் பெற்ற நீர்நிலைகள், சதுப்புநிலங்கள் மற்றும் பழவேற்காடு ஏரியில் விநாயகர் சிலைகளைக் கரைக்கத் தடை விதித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இதற்கான ஏற்பாடுகளை அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் மேற்கொள்ள வேண்டும் என்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தி உள்ளது. மேலும் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு முன்பாகவும் கரைக்கும் போதும் கரைத்த பிறகும் நீர் மாதிரிகளை சேகரிக்க ஆய்வு செய்ய வேண்டும் என்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தி உள்ளது.