#BREAKING மாவட்ட ஆட்சியருக்கு பறந்த திடீர் கடிதம்! ஈரோட்டில் விஜய் பிரச்சாரம் நடத்துவதில் சிக்கல்
விஜய் பிரசாரத்துக்கு தடை கோரி மனு
ஈரோட்டில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் நடத்த அனுமதி வழங்க கூடாது என ஈரோடு மாவட்ட ஆட்சியருக்கு கோயில் செயல் அலுவலர் தனலட்சுமி கடிதம் அனுப்பியுள்ளார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் சுங்கசாவடி அருகே சரளை பகுதியில் தவெக தலைவர் விஜய் 16ம் தேதி, பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில், தவெகவின் இந்த பரப்புரைக் கூட்டத்திற்கு மாவட்ட காவல்துறை 84 நிபந்தனை விதித்திருந்தது. தொடர்ந்து, கால அவகாசகம் தேவைப்படுவதால், தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தை டிச.18ம் தேதி நடத்துவதாக, அக்கட்சியின் நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும், கொங்கு மண்டல அமைப்புச்செயலாளருமான செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். பின்னர், அந்த தேதியில் கூட்டத்தை நடத்த அனுமதி வழங்க கோரி, மாவட்ட நிர்வாகத்திடம் கடந்த தவக.வினர் மனு அளித்திருந்தனர்.
இந்நிலையில், விஜயமங்கலம் சரளை பகுதியில் தவெகவினர் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பொதுக்கூட்டம் நடத்த 19 ஏக்கர் பரப்பளவுள்ள இடத்தை தவெகவினர் தேர்வு செய்துள்ளனர். இந்த நிலம், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள விஜயபுரி அம்மன் கோயிலுக்கு சொந்தமான 31 ஏக்கர் பரப்பளவின் ஒரு பகுதியாகும். குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த மக்கள் பரம்பரையாக இந்த கோயில் நிலத்தை அனுபவித்து வருகின்றனர். சமீபத்தில், விஜயபுரி அம்மன் கோயில் நிலத்தை கையகப்படுத்தி கற்களை அமைத்து வேலி போடும் முயற்சியில் இந்துசமய அறநிலையத் துறை அதிகாரிகள் ஈடுபட்ட போது, குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அங்கு நடப்பட்ட சர்வே கற்களை பிடுங்கி எறிந்தும், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது என்ற அறிவிப்பு பலகையையும் உடைத்து எறிந்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் கோயில் நிலம் அறநிலையத்துறைக்கு சொந்தமானதா? அல்லது குறிப்பிட்ட சமூகத்திற்கு சொந்தமானதா என்பது குறித்த சர்ச்சை நீடித்து வருகிறது.
இது ஒருபுறமிருக்க, விஜயபுரி அம்மன் கோயிலுக்கு சொந்தமான இடத்தில், தவெகவினரோ அல்லது மற்ற அரசியல் கட்சிகளோ, பொதுக்கூட்டங்களோ, அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளோ நடத்த அனுமதி வழங்க கூடாது என்று மாவட்ட நிர்வாகத்திற்கு, இந்து சமய அறநிலையத்துறை கடிதம் அனுப்பியிருக்கிறது. கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கான அனுமதியை இந்து சமய அறநிலையத்துறையிடம் தவெக பெறாத நிலையில், அங்கு கூட்டம் நடத்த அனுமதி அளிக்கக்கூடாது என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில், பொதுக்கூட்டம் நடத்த இந்து சமய அறநிலையத்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், தவெகவினரின் பொதுக்கூட்டத்திற்கு அந்த இடத்தில் அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


