பிரதமர் சொல்லும் “டபுள் எஞ்சின்” எனும் “டப்பா எஞ்சின்” தமிழ்நாட்டில் ஓடாது - மு.க.ஸ்டாலின்..!

 
1 1

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் இன்று பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "பிரதமர் சொல்லும் “டபுள் எஞ்சின்” எனும் “டப்பா எஞ்சின்” தமிழ்நாட்டில் ஓடாது!" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "மாண்புமிகு பிரதமர் அவர்களே, மத்திய பாஜக அரசு ஏற்படுத்தி வரும் அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்து தான் தமிழ்நாடு வரலாறு பேசும் வளர்ச்சியை அடைந்திருக்கிறது. கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க, நீங்கள் சொல்லும் “டபுள் எஞ்சின்” மாநிலங்களான உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகாரை விட, தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, கர்நாடகா, மேற்கு வங்கம் என உங்கள் “டப்பா எஞ்சின்” நுழையாத மாநிலங்கள் தான் வளர்ச்சியில் கொடிகட்டிப் பறக்குது. தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பாஜக செய்யும் துரோகங்களை, நீங்கள் மறைத்தாலும் NDA Betrays TN என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். தில்லியின் ஆணவத்துக்குத் தமிழ்நாடு தலைகுனியாது!” என்று ஸ்டாலிந் தமது பதிவில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத் தேர்தலை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட அனைத்து கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

அக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைத்து தலைவர்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி 'பாரத் மாதா கீ ஜே' என்று கூறி தனது உரையை தொடங்கினார்.

அப்போது அவர் பேசுகையில், “தமிழ்நாடு தற்போது ஆட்சி மாற்றத்துக்கு தயாராகி வருகிறது. தமிழக மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை விரும்புகிறார்கள்.

தமிழ்நாட்டை திமுக அரசிடம் இருந்து விடுவிக்க வேண்டும் என்று மக்கள் நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள். அக்கட்சியின் இறங்கு முகம் இன்றிலிருந்து தொடங்கிவிட்டது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு இரட்டை என்ஜின் ஆட்சி தேவை. தமிழ்நாட்டின் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும், போதைப் பொருட்களை கட்டுப்படுத்தவும், சட்டம் ஒழுங்கை பேணி காக்கவும் திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும்” என்று பேசினார்.