பிரதமர் மோடி கூட்டத்தில் மேடை ஏறப்போகும் கூட்டணி கட்சிகள்!
இந்த முறை தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என மத்திய அமைச்சரும், தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பியூஷ் கோயல், “மதுராந்தகத்தில் நடைபெறும் NDA கூட்டத்தில் பங்கேற்க, பிரதமர் நரேந்திர மோடி ஜன. 23ம் தேதி தமிழகம் வருகிறார். அன்றைய தினம் முதல் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் செயல்பாடுகள் தமிழ்நாட்டில் வேகமெடுக்கும். இந்த முறை தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் உடன்படிக்கை இறுதி செய்யப்பட்டு 23 ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி முன்னிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும்” என்றார்.
வரும் 21ம் தேதி சென்னை வரும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பாஜகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்து பேசி, இறுதி செய்து அன்றைய தினமே கூட்டணி உடன்படிக்கை கையெழுத்தாகும் என்று தமிழக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் தேமுதிக, புதிய தமிழகம், தமாக என இதரக்கட்சிகளுடன் நடத்தும் கூட்டணி பேச்சுவார்த்தை சூடுபிடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்தே, பிரதமர் தலைமையில் வரும் 23ம் தேதி மதுரையில் நடைபெறும் என்டிஏ மாநாட்டில் கூட்டணிக்கட்சிகளின் தலைவர்களை மேடையேற்ற ஏற்பாடுகள் நடந்து வருவதாகத் தெரிகிறது.


